தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்த், போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கிராம் கோகைனுக்கு 12,000 ரூபாய் விலையில், பிரசாத் என்பவரிடம் 40 முறை வாங்கி, மொத்தம் 4.72 லட்சம் ரூபாய் செலுத்தியதாக காவல் துறை தெரிவிக்கிறது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மூன்று கோகைன் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் அவரது கைரேகைகள் இருப்பது உறுதியாகி, ஆதாரமாக பயன்படுத்தப்பட உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரியில் போதைப் பொருள் இருப்பது உறுதியானதை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
இந்த வழக்கு, நுங்கம்பாக்கத்தில் பப் ஒன்றில் நடந்த மோதலைத் தொடர்ந்து, முன்னாள் அதிமுக ஐடி பிரிவு உறுப்பினர் பிரசாத் கைதானதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பிரசாத், ஸ்ரீகாந்துக்கு கோகைன் விற்றதாக ஒப்புக்கொண்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் மற்றொரு நபரான பிரதீப், ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோர் பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், கிருஷ்ணாவும் விசாரணை வளையத்தில் உள்ளார். காவல் துறையினர், இன்னும் சில நடிகர், நடிகைகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். முறையான ஆதாரங்களுடன் அவர்களை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதில், முன்னணி நடிகையாக இருக்கும் நம்பர் நடிகையும் கையும் களவுமாக சிக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ரோஜா கூட்டம்’, ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஸ்ரீகாந்தின் கைது, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த வழக்கு மேலும் விரிவடையுமா, மற்ற நட்சத்திரங்கள் இதில் சிக்குவார்களா என்பது குறித்து காவல் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கும்.
Summary in English : Tamil-Telugu actor Srikanth was arrested in Chennai for buying and using cocaine, paying ₹4.72 lakh for 40 purchases from Prasad. Three cocaine packets were found at his home. Blood tests confirmed drug use, and more actors may be involved, shaking Kollywood.