2025 ஜூன் 12 அன்று அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் (AI171), புறப்பட்ட சில வினாடிகளிலேயே விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியரான விஷ்வாஷ்குமார் ரமேஷ் மட்டுமே உயிர் தப்பினார்.
விமானம் புறப்பட்ட 11 வினாடிகளில், விமானி கேப்டன் சுமீத் சபர்வால், “MAYDAY... MAYDAY... MAYDAY... NO POWER... NO THRUST... GOING DOWN...” என்று கட்டுப்பாட்டு அறைக்கு அவசர அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு, விமானத்தின் இரு என்ஜின்களும் திடீரென பவர் இழந்ததையும், உயரம் பெற முடியாத நிலையையும் குறிக்கிறது.
விமானம் 650 அடி உயரம் வரை மட்டுமே சென்று, பின்னர் மெகானிநகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி, பயங்கர தீப்பிழம்புகளுடன் வெடித்து சிதறியது. விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் (DGCA) மற்றும் விமான விபத்து விசாரணைக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
பறவை மோதல், இரு என்ஜின்களின் தோல்வி, எரிபொருள் மாசு, அல்லது முறையற்ற பிளாப்ஸ் அமைப்பு ஆகியவை சாத்தியமான காரணங்களாக பரிசீலிக்கப்படுகின்றன.
விமானத்தின் டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெகார்டர் (பிளாக் பாக்ஸ்) கண்டெடுக்கப்பட்டுள்ளது, ஆனால் காக்பிட் குரல் பதிவு இன்னும் கிடைக்கவில்லை. விமானத்தில் பயணித்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானியர்கள், 7 போர்ச்சுகீசியர்கள், ஒரு கனடியர் உட்பட 11 குழந்தைகள் இருந்தனர்.
முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மெல்லிய காற்றும் விமானத்தின் உயரம் பெறுவதற்கு சவாலாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த விபத்து, இந்தியாவின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகவும், போயிங் 787 ட்ரீம்லைனரின் முதல் உயிரிழப்பு விபத்தாகவும் பதிவாகியுள்ளது. விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை, இந்த சோகம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.