மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம், 2025 ஜூன் 5-ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
‘நாயகன்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான இப்படம், துரதிர்ஷ்டவசமாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக த்ரிஷாவின் கதாபாத்திரம் பேசப்படுகிறது.
படத்தில், த்ரிஷா ஒரு பார் டான்சராகவும், பாலியல் தொழிலாளியாகவும் சித்தரிக்கப்பட்டு, ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) எனும் கேங்ஸ்டரால் மீட்கப்படுகிறார்.
ஆனால், அவரை தனது வப்பாட்டியாக்கிக் கொள்கிறார் கமல். கதை முன்னேறும்போது, சக்திவேல் தான் வளர்த்த அமரன் (சிலம்பரசன்) மீது சந்தேகம் கொள்கிறார்.
இதனைப் பயன்படுத்தி, சிலர் அமரனை சக்திவேலுக்கு எதிராகத் திருப்பி, சக்திவேலை கொலை செய்யத் தூண்டுகின்றனர். சக்திவேலை தீர்த்து, “நான்தான் இனி ரங்கராய சக்திவேல்” என மீசை முறுக்கும் சிலம்பரசன், த்ரிஷாவையும் தன் வசப்படுத்த முயல்கிறார்.
ஆனால், படத்தின் முதல் திரைக்கதையில், சக்திவேலை தீர்த்துக்கட்ட பின்னர், த்ரிஷாவின் கதாபாத்திரமும் தீர்த்துக்கட்டப்படுவதாக இருந்துள்ளது. பின்னர், சில காரணங்களால் இந்தக் காட்சிகள் மாற்றப்பட்டு, சிலம்பரசன் த்ரிஷாவை விரும்புவது போன்ற காட்சிகள் சேர்க்கப்பட்டன.
இந்த மாற்றமே படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். த்ரிஷாவின் கதாபாத்திரம், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக அவர் ஏற்ற வலிமையான பாத்திரத்திற்கு நேர் எதிராக இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்தது. X-ல் பலர், த்ரிஷாவின் பாத்திரம் தேவையற்றது, கதையுடன் ஒட்டாதது என விமர்சித்தனர்.
மேலும், படத்தின் மெதுவான திரைக்கதை, பாடல்களின் பயன்பாடு இல்லாமை, கதையில் சுவாரஸ்யமின்மை ஆகியவையும் தோல்விக்கு காரணமாக அமைந்தன. முதல் நாளில் வெறும் 17 கோடி வசூல் செய்த இப்படம், ‘இந்தியன் 2’ படத்தை விடக் குறைவாகவே வசூலித்தது.
மணிரத்னத்தின் பாணிக்கு ஏற்ற விறுவிறுப்பு இல்லாதது, த்ரிஷாவின் பாத்திரத்தின் தவறான சித்தரிப்பு ஆகியவை படத்தை ‘நாயகன்’ படத்தின் உயரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தடுத்தன. இதனால், ‘தக் லைஃப்’ ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.