தமிழ் சினிமாவில் 90களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன், தனது அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர்.
விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். சமீபத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற பிளாக்பஸ்டர் படத்தில் நடித்து மீண்டும் கவனம் ஈர்த்த சிம்ரன், தற்போது ‘தி லாஸ்ட் ஒன்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலிவுட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். “தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்று நடிக்க வேண்டும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
தமிழ் சினிமாவில் நடிப்பது எனக்கு மிகவும் சௌகர்யமாக இருக்கிறது. இங்கு வீட்டில் இருப்பது போல உணர்கிறேன். இங்குள்ள மனிதர்கள் எளிமையாக இருக்கின்றனர், அதுவே எனக்கு பிடித்த விஷயம்.
ஆனால், பாலிவுட்டில் அங்குள்ள ஆட்கள் எல்லாம் அதிகமாக சோ அப் பண்ணுவாங்க, அது எனக்கு பிடிக்காத விஷயம். அதை என்னால் சமாளிக்க முடியாது. ஒருவர் முன்பு.. நான் யாரு தெரியுமா..? என இன்னொருவர் காட்டிக்கொள்ள முயற்சி செய்வது கொடுமையான விஷயம்.. அதனால்தான் வேறு இடங்களில் சென்று செட்டில் ஆக முடியவில்லை,” என்று சிம்ரன் கூறினார்.
தமிழ் சினிமாவின் எளிமையையும், மக்களின் அன்பையும் பாராட்டிய சிம்ரனின் இந்த கருத்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சிம்ரன், தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது முத்திரையை பதித்து வருகிறார்.