சகிக்க முடியல.. இதுக்கு பேரு தான் Thug-ஆ.. ச்சைக்.. Thug Life திரைவிமர்சனம்!


மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜே.ஜே. தாமஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த தக் லைஃப் திரைப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 

கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு, மணிரத்னத்தின் பாணியில் உணர்ச்சிகரமான கதையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு பக்கம் பரபரப்பையும், மறுபக்கம் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

கதைக்களம்

படம் ஒரு கேங்ஸ்டர் கதையாகத் தொடங்குகிறது. கமல்ஹாசன் ஒரு கேங்ஸ்டராக, சக கேங்ஸ்டருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடும் காட்சியுடன் தொடக்கம் பரபரப்பாக அமைகிறது. 

ஆனால், பேச்சுவார்த்தை என்பது வில்லனின் சதியாக மாற, கமலின் குழுவினர் ஒரு பொதுமகனைக் கொலை செய்கின்றனர். இதைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவரின் மகனை கமல் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். 

இந்த மகனின் பயணமும், கமலின் கதாபாத்திரத்தின் முடிவுகளும் படத்தின் மையக் கேள்விகளாக மாறுகின்றன.

படத்தின் பலம்

முதல் பாதி பரபரப்பாகவும், மணிரத்னத்தின் பாணியில் காட்சி அமைப்புகளுடனும் ரசிக்க வைக்கிறது. இடைவேளைக் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. 

கமல்ஹாசனின் நடிப்பு, எப்போதும் போல, படத்தின் முதுகெலும்பாக உள்ளது. அவரது கதாபாத்திரத்தின் உணர்ச்சிகரமான தருணங்களும், கேங்ஸ்டர் தலைவனாக வெளிப்படுத்தும் தீவிரமும் பாராட்டுக்குரியவை. 

சிம்புவின் கதாபாத்திரமும் முதல் பாதியில் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

படத்தின் பலவீனங்கள்

இரண்டாம் பாதியில் படம் தொய்வடைகிறது. கதையின் ஒருமை தவறி, பல துணைக் கதைகள் கவனத்தை சிதறடிக்கின்றன. குறிப்பாக, திரிஷாவின் கதாபாத்திரம் படத்திற்கு எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை என்றே சொல்லலாம். 

அவரது கதாபாத்திரம் ஒரு பார் டான்ஸராகவும், கமல் மற்றும் சிம்புவின் வாழ்க்கையில் ஒரு வப்பாட்டியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதற்கு எந்த தெளிவான நோக்கமும் இல்லை. 

திரிஷாவின் கதாபாத்திரத்தைச் சுற்றிய உரையாடல்கள், குறிப்பாக சிம்புவுடனான காதல் காட்சிகள், செயற்கையாகவும், ரசிகர்களுக்கு விரக்தியை உண்டாக்குவதாகவும் உள்ளன. 

“என்ன கருமம் புடிச்ச ரிலேஷன்ஷிப் டா இது?” என்று ரசிகர்கள் திரையரங்கில் வெளிப்படுத்தும் அளவுக்கு இந்தக் காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன.

மேலும், திரிஷாவின் பின்னணி (சித்தப்பாவால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டவர்) படத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாமல், வெறுமனே சேர்க்கப்பட்டதாகவே தோன்றுகிறது. 

இது திரிஷாவின் திறமையை வீணடிக்கும் ஒரு மோசமான கதாபாத்திர வடிவமைப்பாக உள்ளது. சிம்பு, கமலின் தம்பியாகவும், திரிஷாவை மனைவியாக்க விரும்புபவராகவும் தோன்றுவது கதையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த முக்கோண உறவு மற்றும் அதைச் சுற்றிய காட்சிகள் ரசிகர்களுக்கு புரிந்துகொள்ள முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளன.

திரைக்கதையின் தோல்வி

படத்தின் மிகப்பெரிய பலவீனம், ஒரு ஒருங்கிணைந்த கதைக்களத்தை உருவாக்கத் தவறியது. முதல் பாதியில் தொடங்கிய பரபரப்பு, இரண்டாம் பாதியில் தடுமாறுகிறது. 

கிளைமாக்ஸ் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு, கதை திசையை இழக்கிறது. ஒரு மையப் புள்ளியை இணைக்கும் வலுவான கரு இல்லாததால், படம் ஒரு சிதறலான அனுபவமாக மாறுகிறது.

அசோக் செல்வன், சேத்தன் காவல் துறை அதிகாரிகளாக தோன்றுகிறார்கள். ஆனால், அவர்களின் நோக்கம் என்ன..? எதற்கு கமல்ஹாசன் கேங்கை துரத்துகிறார்கள் என்பதை வலுவாக காட்டாத காரணம் இரண்டு கதாபாத்திரங்களையும் நாசம் செய்து விட்டது.

அதே போல, அசோக் செல்வன் மனைவியாக நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் செய்து விவாவகரத்து செய்து விட்டார்கள் என்றும் கூறுகிறார்கள். அதே நேரம், இருவரும் அன்யோன்யமாகவே படத்தில் பயணிக்கிறார்கள்.

தக் லைஃப் ஒரு சராசரிக்கும் கீழான (Below Average) படமாகவே உள்ளது. மணிரத்னத்தின் பாணி, கமலின் நடிப்பு, முதல் பாதியின் பரபரப்பு ஆகியவை படத்திற்கு சிறிது மதிப்பு சேர்க்கின்றன. 

ஆனால், திரிஷாவின் தேவையற்ற கதாபாத்திரம், குழப்பமான உறவு முறைகள், மற்றும் தொய்வடையும் இரண்டாம் பாதி ஆகியவை படத்தை ஏமாற்றமாக்குகின்றன. 

கமல்ஹாசன் துரோகத்தில் வீழத்தப்பட்டு இறந்துவிட்டார் என்று நம்பிய போது உடம்பில் இரண்டு குண்டு பாய்ந்த நிலையில் உறைபனியில் இருந்து ஒரு குச்சியை ஊன்றிக்கொண்டு உயிர் பெற்று வருகிறார்.. அந்த நேரத்தில் விவேகம் பட காட்சியை நினைவூட்டி தலை விடுதலை விழிகளில் பாருடா என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர். 

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்கள் இதை ஒரு முறை பார்க்கலாம், ஆனால் பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்வது ஏமாற்றத்தை மட்டுமே தரும்.

Rating : 2.0/5.0 

--- Advertisement ---