சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆங்கிலேயர் காலத்து பீரங்கி ஒன்று பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜ் ஆட்சியின்போது (1760-1820) கிழக்கிந்திய கம்பெனியால் சேலத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த பீரங்கி, ஆரம்பத்தில் சேலம் கோட்டையை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டது.
![]() |
குண்டு போடும் தெரு |
1858-ல் கோட்டை இடிக்கப்பட்ட பிறகு, கோட்டையின் தென் அகழி பகுதியில், இன்றைய ‘குண்டு போடும் தெரு’ என அழைக்கப்படும் இடத்தில் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில், நேரம் அறிவிக்கும் விதமாக இந்த பீரங்கி மூலம் தினமும் மதியம் 12 மணிக்கு குண்டு வெடிக்கப்பட்டது.
1873-க்குப் பிறகு இது இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டு, 1950-ம் ஆண்டு வரை இந்த நடைமுறை தொடர்ந்தது. அதன் பிறகு, பீரங்கி வெடிப்பு நிறுத்தப்பட்டு, மாநகராட்சி நிர்வாகம் இதனை பராமரித்து வருகிறது.
![]() |
British-era cannon |
‘குண்டு போடும் தெரு’ என்ற பெயர் இப்பகுதிக்கு தனித்துவமான அடையாளத்தை அளித்துள்ளது. இப்பகுதி வாசிகளிடம் பேசியபோது, “எங்கள் ஏரியா பெயர் கேட்பவர்களுக்கு முதலில் பயத்தை ஏற்படுத்தினாலும், இதன் வரலாறு எங்களுக்கு பெருமை தருகிறது.
பீரங்கி மூலம் நேரம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்தப் பகுதி முக்கியத்துவம் பெற்றது. இப்போது இந்த பெயர் எங்களுக்கு ஒரு கெத்து,” என்று கூறினர். சிலர், “பெயரைக் கேட்டு வெடிகுண்டு தயாரிக்கும் இடமோ என தவறாக நினைப்பவர்களும் உண்டு.
![]() |
Gundu Podum Theru |
ஆனால், இதன் வரலாறு தெரிந்தால் இந்தப் பகுதி மீது மரியாதை வரும்,” என்றனர். இந்த பீரங்கி, சேலத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை பறைசாற்றுவதாக உள்ளது.
மாநகராட்சி இதனை பராமரித்து, வரலாற்று சின்னமாக பாதுகாப்பது பாராட்டுக்குரியது. இது, சேலத்தின் காலனிய ஆட்சி காலத்தையும், பாரம்பரியத்தையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறது.
English Summary: A British-era cannon, brought to Salem by the East India Company during King George III’s reign (1760-1820), is preserved at the Salem Municipal Office. Initially used to protect Salem Fort, it was relocated to ‘Gundu Podum Theru’ after the fort’s demolition in 1858.