மதுரையில் காவலர் ஒருவர் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் பூபாலன், தனது மனைவியை அடித்து சித்திரவதை செய்ததை தனது தங்கையிடம் ரசித்து பேசிய ஆடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பூபாலனின் மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பூபாலனின் தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். 

இந்த சம்பவத்தில், பூபாலன் தனது மனைவியை கழுத்தை நெரித்து, காலால் மிதித்து கொடுமைப்படுத்தியதாக ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், பூபாலன், அவரது தந்தை செந்தில்குமார், தாய் விஜயா மற்றும் தங்கை அனிதா ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆடியோவை கேட்ட பெண்ணின் தந்தை, “பெண்களுக்கு இது என்ன சாபக்கேடு?” என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த சம்பவம் காவல்துறையினர் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. 

English Summary : A shocking audio of Madurai policeman Boobalan boasting to his sister about torturing his wife over dowry demands has gone viral. A case has been filed against Boobalan, his parents, and sister. The victim, a teacher, is in critical condition.