சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைச்சுற்றல் காரணமாக நேற்று காலை சென்னை கிரீன்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு மூன்று நாட்கள் ஓய்வு அறிவுறுத்திய நிலையில், கூடுதல் பரிசோதனைகளுக்காக இன்று காலை 7:30 மணியளவில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்று காலை நடைபயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து, முதலமைச்சர் மருத்துவ பரிசோதனைக்காக கிரீன்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பொது உடல்நலப் பரிசோதனை, இரத்த பரிசோதனை மற்றும் இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனை அறிக்கையின்படி, முதலமைச்சர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தபடி அரசு அலுவல்களை தொடர்வார்.
இந்நிலையில், இன்று காலை கூடுதல் மருத்துவ பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மாற்றப்பட்டார்.
பரிசோதனைகள் முடிந்த பின்னர், அவர் மீண்டும் கிரீன்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முதல்வர் உடல்நிலை பற்றி முழுமையாக அறிய ஆந்திராவில் இருந்து சிறப்புமருத்துவ குழு ஒன்றும் சென்னை விரைகிறது என்ற தகவல்களும் பேசப்படுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முதலமைச்சரின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சர் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆங்கிலத்தில் சுருக்கம் : Tamil Nadu CM M.K. Stalin, admitted to Apollo Hospital, Chennai, for dizziness, was shifted to Thenampettai Apollo for further tests today. After initial check-ups, he requires three days of rest. He will continue official duties from the hospital and return to Greens Road Apollo post-tests.


