21 முறை.. 10 வயசு மாணவி.. சடலமான பிறகும் விடாத சிறுவன்.. வெப் சீரிஸ் தூண்டுதலால் அரங்கேறிய குரூரம்..

ஐதராபாத் : ஐதராபாத்தில் கிரிக்கெட் பேட்டை திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்த 14 வயது சிறுவன், 10 வயது சிறுமியை கத்தியால் 21 முறை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குகாட்பள்ளி பகுதியில் உள்ள சங்கீத் நகரில் நடந்த இந்த மோசமான குற்றச்சம்பவம், உள்ளூர் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.கொல்லப்பட்ட சிறுமி சஹாஸ்ரா, 6ஆம் வகுப்பு பயிலும் மாணவி.

இவரது தந்தை பைக் மெக்கானிக்காகவும், தாய் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகவும் பணிபுரிகின்றனர். சம்பவத்தன்று (ஆகஸ்ட் 18), சஹாஸ்ராவின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர், மேலும் அவரது 6 வயது தம்பி பள்ளிக்குச் சென்றிருந்தார்.

இதனால், சஹாஸ்ரா வீட்டில் தனியாக இருந்தார்.மதியம் வீடு திரும்பிய சஹாஸ்ராவின் தந்தை, மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்த அவர், காவல்துறையை அழைத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த குகாட்பள்ளி காவல்துறையினர், சிறுமியின் உடலில் 21 கத்திக் குத்து காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், சிறுமி இறந்த பிறகும் அவள் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக மீண்டும் பலமுறை கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார் என்ற தகவல் தான் அது. கொலையாளியைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையைத் தொடங்கியது.

நான்கு நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, பக்கத்து வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுவனை காவல்துறை கைது செய்தது. விசாரணையில், சிறுவன் தான் கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டார்.

சஹாஸ்ராவின் தம்பிக்கு சொந்தமான எம்ஆர்எஃப் (MRF) கிரிக்கெட் பேட்டை திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்ததாகவும், சஹாஸ்ரா தன்னைப் பிடித்து கூச்சலிட்டதால், பயந்து அவளை கத்தியால் குத்தியதாகவும் அவன் தெரிவித்துள்ளான். 

காவல்துறையினர், சிறுவனின் வீட்டில் இருந்து ரத்தம் படிந்த கத்தி, ஆடைகள் மற்றும் ஒரு குறிப்பேட்டை கைப்பற்றினர்.

அந்த குறிப்பேட்டில், திருட்டு திட்டத்தை விரிவாக எழுதியிருந்ததுடன், "மிஷன் டான்" என்று பெயரிட்டு, திருட்டுக்கு முன் தயாரித்த திட்டங்களையும் குறிப்பிட்டிருந்தான்.

மேலும், சிறுவன் நெட்ஃபிக்ஸ் தொடர்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து இத்தகைய திருட்டு யோசனைகளைப் பெற்றதாகவும், வீட்டில் பூட்டை உடைப்பது மற்றும் பணப்பெட்டியை திறப்பது குறித்து இணையத்தில் தேடியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க, சிறுவன் ஏன் கத்தியுடன் வீட்டிற்கு சென்றான் என்ற கேள்விக்கு பதில் தேடி வருகின்றனர். சிறுவனின் பெற்றோருக்கு இந்தக் குற்றம் பற்றி எதுவும் தெரியாது எனவும், அவனது தந்தை வேலையில்லாமல் இருப்பதாகவும், தாய் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. "இந்த சம்பவத்திற்கு பிறகு எங்களால் தூங்க முடியவில்லை. இவ்வளவு கொடூரமான செயலை ஒரு சிறுவன் செய்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது," என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

காவல்துறை இந்த வழக்கு குறித்த முழு விவரங்களை இன்று (ஆகஸ்ட் 23, 2025 ) அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

Summary : In Hyderabad, a 14-year-old boy stabbed 10-year-old Sahasra 21 times to death while attempting to steal a cricket bat from her home. The incident occurred when Sahasra was alone. Police arrested the boy after four days, recovering a blood-stained knife and a notebook detailing his plan.