திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் ஒன்பது பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற தாயை இழந்து, தத்து எடுத்தவர்களையும் பறிகொடுத்து, ஆதரவற்ற நிலையில் சித்தி வீட்டில் வசித்து வந்த இந்த சிறுமி, ஒரு சிறுவனின் ஆசை வார்த்தைகளை நம்பி பழகியதாக கூறப்படுகிறது.

சிவா என்ற சிறுவன், திருமணம் செய்வதாக கூறி சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தனது நண்பர்களான ஜெயகாளீஸ்வரன், மதன்குமார், பரணிகுமார், பவபாரதி, நந்தகோபால் மற்றும் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேருடன் சேர்ந்து மது அருந்தவைத்து சிறுமியை மாறி மாறி சீரழித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொடூரம் ஹோட்டல் மட்டுமின்றி மதன்குமாரின் வீட்டிலும் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதே கும்பல் மற்றொரு 13 வயது சிறுமியையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது விசாரணையில் வெளிப்பட்டு, காவல்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இரு சிறுமிகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து, மாறி மாறி வன்கொடுமை செய்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. 17 வயது சிறுமி நான்கு மாத கர்ப்பமான நிலையில் வாந்தி எடுத்ததை அடுத்து, குடும்பத்தினர் சந்தேகப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்தபோது இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
உடுமலை ஆல் வுமன் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, ஒன்பது பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆறு பேர் கோவை மத்திய சிறையிலும், மூன்று சிறுவர்கள் கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள கவனிப்பு இல்லத்திற்கும் அனுப்பப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள் 14, 15, மற்றும் 16 வயதுடையவர்கள், மற்றவர்கள் 19 முதல் 24 வயது வரையிலானவர்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது, மேலும் நீதிமன்ற அனுமதியுடன் கருவை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவா தங்கிய விடுதியின் உரிமையாளரிடம், சிறுமியை அனுமதித்தது குறித்து விசாரணை நடைபெறுகிறது. விடுதிக்கு உரிமம் உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படுகிறது.
பெற்றோர் ஆதரவு இல்லாத நிலையில், பாசத்திற்கு ஏங்கிய இந்த சிறுமிகளை குறிவைத்து இந்த கும்பல் செயல்பட்டது, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், பெற்றோர் வழிகாட்டுதல் இல்லாததால் தவறான பாதைக்கு செல்லும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் சமூகமும், இந்த சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
Summary in English : A 17-year-old orphan girl from Udumalai, Tiruppur, was assaulted by nine individuals, including minors, over months. Another 13-year-old was also victimized. The police arrested all nine under the POCSO Act. DNA tests and abortion proceedings are underway, with investigations ongoing.

