தோழி வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவிகள்.. முதியவர்களுக்கு இரையான கொடூரம்.. சென்னையில் பயங்கரம்..

சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பயங்கர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் புகாரின் அடிப்படையில், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், வலசரவாக்கம், ஜெயநகர் இரண்டாவது தெருவில் உள்ள வீடு ஒன்றில் இந்தக் கொடூரம் அரங்கேறியது தெரியவந்தது.

விசாரணையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், 17 வயது சிறுமியுடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

முதியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த இரு சகோதரிகள் கஞ்சா மற்றும் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

பணத்தாசையால், இவர்கள் பாலியல் தொழிலுக்கு திரும்பியதுடன், தனியாக இத்தொழிலை நடத்த முடிவு செய்தனர். இதற்கு பகடைக்காயாக, ஒரு சகோதரியின் 12-ஆம் வகுப்பு பயிலும் மகளைப் பயன்படுத்தி, அவளது பள்ளித் தோழிகளை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொழிலுக்கு இறையாக்கிய கொடூரம் அம்பலமாகியுள்ளது.

ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி, அவர்களுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை தந்து, 25,000 முதல் 30,000 ரூபாய்க்கு முதியவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தக் கொடூரத்தில் சில மாணவிகளின் பெற்றோர்களுக்கும் தெரிந்திருந்ததாகவும், அவர்கள் பணத்தால் அடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன, இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாலியல் தொழில் வலையில் ஹைதராபாத் வரை இணைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சில மாணவிகள் விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாணவிகளை போலீசார் மீட்டுள்ளனர், மேலும் 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி நடுக்கடலில் கைது

இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குளச்சல் அருகே வள்ளவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த வில்சன், கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் தங்கி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கேரள கடலோர காவல்துறையின் உதவியுடன், குமரி மகளிர் போலீசார் நடுக்கடலில் வில்சனை மடக்கி கைது செய்தனர். கைதான வில்சன், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க காவல்துறை மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Summary : In Chennai, two sisters ran a racket exploiting schoolgirls, using one’s daughter to lure peers. Targeting poor families, they coerced girls into prostitution, charging Rs 25,000–30,000. Some girls were trafficked to Hyderabad. Police rescued over 10 girls and arrested five suspects.