கோவை பீளமேடு, பிஆர்பி கார்டனில் வசிக்கும் ஒரு பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்கள் இழைக்கப்பட்டதாகவும், உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், சிங்கம்நறி பகுதியைச் சேர்ந்த சர்குணனை திருமணம் செய்த இந்தப் பெண், தனது கணவர், மாமனார் நீலமேகம், மாமியார் உமாராணி மற்றும் அவர்களது உறவினர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகக் கூறுகிறார்.

திருமணத்திற்குப் பின் கோவையில் குடியேறிய இவர், 2020இல் தனது தந்தை இறந்ததாகவும், அதற்கு கணவரின் குடும்பத்தினரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், 2020இல் தனக்கு பிறந்த பெண் குழந்தையை (தற்போது 5 வயது) வளர்த்து வருவதாகவும், கணவர் தரப்பில் இருந்து விவாகரத்து கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
புகாரளித்த பெண்ணின் கூற்றுப்படி, தனது கணவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், இது தொடர்பான ஆதாரங்களை (வீடியோ) தன்னிடம் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உடலுறவு ரீதியான தொந்தரவு கொடுக்கிறார்கள், பேண்டை பிடிச்சு இழுக்கிறார்கள், இதெல்லாம் என்ன.? சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை .
கடந்த ஒன்பது மாதங்களாக கணவரின் வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வருவதாகவும், இன்று (செப்டம்பர் 4, 2025) காலை 9:20 மணியளவில் கணவர், மாமனார், மாமியார் மற்றும் அவர்களுடன் வந்த சிலர் தன்னையும் தனது தாயாரையும், தம்பியையும் தாக்கியதாகவும் கூறினார்.
இதில், தம்பிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது தாயார் வீட்டிற்குள் பூட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும் புகார் தெரிவித்தார்.மேலும், இவர்களுக்கு எதிராக கோவை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் உரிய பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
“எனது குழந்தையின் பாதுகாப்பு முக்கியம். எங்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு வாரத்தில் எங்களை தீர்த்துக் கட்டுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
தற்போது, விவாகரத்து வழக்கு மற்றும் சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், ஆனால் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் கோவையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. “தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?” என்று கேள்வி எழுப்பிய அவர், அரசு மற்றும் காவல்துறையிடம் இருந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
“எங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதற்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே பொறுப்பு,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமா.? என்பது குறித்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Summary: A woman in Coimbatore alleges domestic violence and assault by her husband, his family, and hired men. Facing divorce threats, she seeks police protection for herself and her family, citing ongoing abuse and safety concerns for her five-year-old daughter.

