மீண்டும்.. மீண்டுமா..? இழு இழு என இழுக்குறாய்ங்களே... “பைசன்” படம் எப்படி இருக்கு..? - திரைவிமர்சனம்

மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் என நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் "பைசன்" (பைசன் காளைமாடன்) இன்று வெளியாகியுள்ளது.

ஜாதிய ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பிய கிராம உலகில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் எப்படி தடைகளைத் தாண்டி உயர்ந்து நிற்கிறான் என்பதைச் சொல்லும் இந்தப் படம், கபடி என்ற விளையாட்டை மையமாகக் கொண்டு முன்னெடுக்கிறது.

யூகிக்கப்பட்ட கதை என்றாலும், அதன் உணர்ச்சி அலைகள் பார்வையாளரைத் தாக்குகின்றன.

கதை: ஏற்றத்தாழ்வின் நடுவே பறப்பு

ஜாதி பாகுபாடுகள் கொண்ட மாவட்டத்தின் ஒரு கிராமம். அங்கு ஒடுக்கப்பட்ட ஜாதி குடும்பத்தில் பிறந்த கிட்டான் (துருவ் விக்ரம்) – அவனது வாழ்க்கை தடைகளால் நிரம்பியது.

ஆனால், கபடி என்ற விளையாட்டு அவனது ஆயுதமாகிறது. பல்வேறு சவால்களைத் தாண்டி, அவன் மிகப்பெரிய கபடி வீரராக உருமையெடுக்கிறான். கதை டிரைலரில் இருந்தே கணிக்கப்பட்டதுதான். ஆனால், ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை வலிந்து திணிக்காமல், அவற்றை இயல்பாகக் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

ஒருபக்கம் பாகுபாடுகளும் மோதல்களும் நடக்கின்றன, மறுபக்கம் கிட்டானின் முயற்சிகள் தொடர்கின்றன. இந்த ஏற்றத்தாழ்வுள்ள மண்ணில், எந்த வேலிக்கும் அடைபடாமல் வானத்தை நோக்கிப் பறக்க வேண்டும் என்பதே படத்தின் அடிநாதம். 

இது உணர்ச்சியைத் தூண்டுகிறது, ஆனால் புதுமையின்மை சற்று இழுக்கிறது.சர்ச்சைக்குரிய டிரைலர் காட்சிகளைப் போலவே, படம் இரு ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் ஆதரவுள்ள இரு முக்கியப் புள்ளிகளை (லால் – கந்தசாமி, அமீர் – பாண்டியராஜன்) ரெஃபரன்ஸ் வைத்துப் பயணிக்கிறது.

ஆனால், எந்தத் தரப்பும் அதிருப்தியடையக்கூடாது என இயக்குநர் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். அவர்களிடையேயான சொந்தச் சண்டை ஜாதி மோதலாக மாற்றப்பட்டிருக்கிறது, ஆனால் மென்மையாக.

மாற்று ஜாதியைச் சேர்ந்த பி.டி. வாத்தியார் துருவுக்கு பலமாக இருப்பது, அமீரின் கதாபாத்திரம் தனது ஆதரவாளரின் ஆதிக்க மனப்பாங்கை கண்டிப்பது, லாலின் கதாபாத்திரம் ஜாதியைப் பார்க்காமல் பழகுவது – இவை அனைத்தும் சர்ச்சை அக்னியை ஊதி அணைக்கும் மெச்சூரிட்டியை வெளிப்படுத்துகின்றன.

நடிப்பு: பசுபதி டோமினேஷன், துருவின் முன்னேற்றம்

துருவ் விக்ரம் கிட்டானாக முயன்றாலும், முதல் பாதியில் அவரது நடிப்பு இன்னும் மெருகேறியிருக்கலாம். அப்பாவைத் தாக்கும் காட்சிகளில் மட்டும் வெளிப்படும் வேகம், பிற இடங்களில் வரவில்லை. .

முகப் பாவனைகளை இன்னும் பயிற்றுவிக்கலாம். ஆனால், அரக்கன் பசுபதியுடன் அதிக காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையால், வித்தியாசம் பளிச்செனத் தெரிகிறது. பல இடங்களில் "ஹீரோ பசுபதிதான்" என்ற எண்ணம் வருகிறது! 

ஜப்பான் காட்சிகளில் துருவ் மேம்பட்டு இருக்கிறார் – அங்கு உணர்ச்சி அலைகள் சரியாகப் பாய்கின்றன.பசுபதி அரக்கனாக அசத்துகிறார்; அவரது வசனங்கள் ஷார்ப்பான யதார்த்தத்தைத் தருகின்றன. அமீர், லால் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களைச் சரியாக வைத்திருக்கிறார்கள். ரஜிஷா விஜயன் துருவின் அக்காவாக உருக்கமாக நடித்தாலும், முகத்தில் மலையாளத் தேசம் பிரதிபலித்துவிடுகிறது – கத்தரி போட்டிருந்தால் நல்லது.

அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயின் போர்ஷனில் அழுத்தமில்லை; கிளைமாக்ஸ் லிப் கிஸ், வயது முதிர்ந்த பெண்ணுடன் காதல் என்ற மாரி செல்வராஜ் டெம்ப்ளேட்டுக்காகவே பயன்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக ஆழமான அக்கா கேரக்டருக்கு மண் மணத்தோடு ஒரு நடிகையைத் தேர்ந்தெடுத்திருந்தால், படம் இன்னும் வேகமாக ஓடியிருக்கும்.

தொழில்நுட்பம்: வேகத்தைத் தடுக்கும் நீளம்

கதையைச் சுற்றிய கதாபாத்திரங்கள் பரபரப்பாக இயக்கப்பட்டிருக்கின்றன. அவைதான் நாயகனை உந்தித் தள்ளுகின்றன. ஆனால், ரஜிஷா உட்பட பல கிளைக் கதைகளை கட் செய்திருந்தால், படம் இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கும். மீண்டும்.. மீண்டுமா..? என்று சில காட்சிகள் சலிப்பை தட்டுகினனர்.

இரண்டாம் பாதி நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் எப்போ படம் முடியும்.. இழு இழுன்னு இழுக்குராய்ங்க.. என்ற உணர்வும் எட்டிப்பார்க்கிறது. அதே போல, ஆரம்பத்தில் ஜப்பானைக் காட்டாமல் கதைக்குள் நுழைந்திருந்தால், "யாருக்கு என்ன நடக்கும்?" என்ற பதைபதைப்பு பார்வையாளருக்கு இருந்திருக்கும் – அந்த சான்ஸை மாரி தவறவிட்டார்.

கர்ணன் போல கழுதை குறியீடுகளிலோ, வாழை போல காதல் குறியீடுகளிலோ அதிக நேரம் செலவழிக்கவில்லை; மையக் கதையில் நிற்கிறது – இது ஆறுதல். புத்தர் சிலை ஒரு இடத்தில் மட்டும் வருகிறது. வசனங்கள் யதார்த்தமானவை, குறிப்பாக பசுபதி-அமீர் பகுதிகளில். கபடி காட்சிகள் உற்சாகமானவை, ஆனால் சற்று நீளமானவை.

முடிவுரை: உயர்ந்து பறக்கும் உணர்வு

பைசன் மாரி செல்வராஜின் சமூக உணர்வைத் தக்கவைக்கிறது, ஆனால் அவரது முந்தைய படங்களின் உச்சத்தைத் தொடவில்லை. ஜாதி மோதல்களை சமநிலையில் காட்டி, விளையாட்டு மூலம் ஏற்றல் தரும் இந்தப் படம், குடும்பங்களுடன் பார்க்கத்தக்கது.

துருவின் அடுத்த படங்களில் இன்னும் மெருகெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜாதி மண்ணில் இருந்து வானத்தை நோக்கிப் பறக்கும் கிட்டானின் பயணம், உங்களையும் ஊக்குவிக்கும். தீபாவளிக்கு தியேட்டருக்கு போங்கள். பைசனை என்ஜாய் பண்ணுங்க.

Summary : Mari Selvaraj's "Bison" (Bison Kaalaimadan) stars Dhruv Vikram as Kittan, an underprivileged youth rising as a kabaddi star amid caste discrimination in a rural village. Balancing social tensions without preachiness, it features strong performances from Pasupathy and Ameer, though pacing drags in the second half. Emotional yet predictable, it's a solid sports drama on resilience.