திருவள்ளூர் : கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த நர்ஸ் உள்பட நான்கு பேரை ஆர்.கே.பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருத்தணி அருகே சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் (வயது 29). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி காயத்ரி (25), திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகிய நிலையில், 2 வயது பெண் குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம் (நவம்பர் 19) காலை யுவராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காயத்ரி அக்கம்பக்கத்தினரிடம் கதறி அழுதுள்ளார்.
ஆனால், யுவராஜின் தந்தை ஆறுமுகம், மகனின் கழுத்தில் காயங்கள் உள்ளது. என் மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான குழுவினர் காயத்ரியை போலீஸ் நிலையம் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காயத்ரி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் அவர் கூறியதாவது: “சென்னையில் டிப்ளமோ நர்சிங் படிக்கும்போது, அங்கு பணியாற்றிய திருத்தணி அகூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (30) என்பவரை காதலித்தேன். காதல் விவகாரம் தெரிந்ததும் என்னை உறவினர் மகன் யுவராஜுக்கு என் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
பின்னர் திருத்தணியில் உள்ள அதே மருத்துவமனையில் நர்ஸாக சேர்ந்தேன். அப்போது மீண்டும் சீனிவாசனுடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். இதை அறிந்த யுவராஜ் என்னை வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, சீனிவாசனிடம், என் கணவரைக் கொலை பண்ணு.. எப்போ வேணாலும் நாம உல்லாசமா இருக்கலாம்.. என்று கூறினேன். அதன் பிறகு இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டோம்.
நேற்று முன்தினம் யுவராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது, சீனிவாசனும் அவரது நண்பர்களான மணிகண்டன் (28), ஹேம்நாத் (ஜில்லு - 22) ஆகியோரும் வீட்டுக்கு வந்தனர். நாங்கள் நால்வரும் சேர்ந்து யுவராஜின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தோம்.
பின்னர் தூக்கிட்டு தற்கொலை போல காட்டி ஏமாற்றினேன்.” இதையடுத்து தலைமறைவாக இருந்த காயத்ரி, சீனிவாசன், மணிகண்டன், ஹேம்நாத் (ஜில்லு) ஆகிய நான்கு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலைக்குப் பயன்படுத்திய கயிறு, மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வழக்கு விசாரணை தொடர்கிறது.
Summary : Police arrested a nurse, her lover, and two accomplices for allegedly murdering her husband in Tiruttani. The woman, Gayathri, confessed that she and her former lover Srinivasan strangled her husband Yuvaraj after he suspected her affair. They staged the killing as a suicide before police exposed the crime.

