காஞ்சிபுரம், நவ. 24: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சாருமி, தனது காதலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதான ரவுடி நவமணி மீது சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோமங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த சாருமி, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோருடன் வீட்டில் இருந்தார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது, நல்லூரைச் சேர்ந்த ரவுடி நவமணி என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
விசாரணையில், சிறுமியும் நவமணியும் காதலித்து வந்தது தெரியவந்தது. காதலன் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, சோமங்கலம் அருகேயுள்ள ஏரியாவில் தனி வீடு எடுத்து தங்க வைத்திருந்தார். மேலும், சிறுமியுடன் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால், போலீசார் நவமணி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நவமணி மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு நவமணி ஜாமினில் வெளியே வந்தார்.
சிறுமியின் வீடும் நவமணியின் வீடும் ஒரே தெருவில் இருந்ததால், மீண்டும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி அடிக்கடி நவமணி வீட்டுக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், நவமணியிடம் சென்று கண்டித்து அடித்துள்ளனர்.
இதனால் சிறுமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், வழக்கம்போல நவமணி வீட்டுக்குச் சென்ற சிறுமி, வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து, அறையை உள்பக்கம் தாழிட்டு, மின்விசிறியில் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், நவமணி குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த சோமங்கலம் போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குப் பதிவு செய்து, இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary : A 15-year-old girl named Sarumi from Somangalam near Sriperumbudur committed suicide by hanging at her lover Navamani's house. Previously in a relationship, Navamani, a rowdy with murder cases, abducted her, leading to POCSO charges and arrest. Released on bail, they reconnected; distressed by parents' reprimand, she took her life. Police investigate if it's murder.

