ஹோசூர், டிசம்பர் 9 : கிருஷ்ணகிரி மாவட்டம், ஹோசூர் பார்வதி நகர் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.
21 வயது கூலித் தொழிலாளி சரவணனை, அவரது 20 வயது மனைவி முத்துலட்சுமியே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிசம்பர் 7-ஆம் தேதி நள்ளிரவு நடந்த கொலை:
முத்துலட்சுமியின் முதல் காதலனும், அதே பகுதியைச் சேர்ந்தவருமான சூர்யா, நண்பர்கள் சக்தி, சந்தோஷ் ஆகியோருடன் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த சரவணனின் வாயில் துணியை அடைத்து, கத்தியால் குத்தினர். இரத்தம் வீடு முழுதும் தெறித்தும், வெறி அடங்காமல் தொடர்ந்து குத்தி கொலை செய்தனர்.
கொலை நடக்கும் போது முத்துலட்சுமி, அருகில் இருந்த மாமியார் வீட்டுக் கதவை வெளிப்புறமாகப் பூட்டி வைத்திருந்தார். இரத்த வெள்ளத்தில் முனகியபடி உயிருக்கு துடித்த கணவனை பார்த்து ரசித்துள்ளார் முத்துலட்சுமி.
முதலில், குழந்தை காணமா போச்சுன்னு தேடி போனேன்.. வீட்டுக்கு வந்து பார்த்தா இறந்து கிடந்தார்.. “யாரோ கொலை செய்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்” என கடுமையாக அழுது புலம்பிய முத்துலட்சுமி, போலீஸாரின் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

“குழந்தையைத் தேடிப்போய் திரும்பி வந்தேன்… அப்போதுதான் கொலை நடந்திருப்பது தெரிந்தது” என்று சொன்ன கதையில் “ நட்ட நடு ராத்திரியில் குழந்தை எப்படி காணாமல் போகும்?” என்ற சந்தேகம் எழுந்ததே உண்மையை வெளிக் கொண்டு வந்தது.
கொலைக்கான பின்னணி – குழந்தைத் திருமணமும் துன்பமும்
- முத்துலட்சுமிக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே (14 வயது) சூர்யாவுடன் நட்பு நெருக்கம் ஏற்பட்டது.அதன் பிறகு சரவணனுடன் பழக்கம் ஏற்பட்டு, வயது 16-ஐயே எட்டாத நிலையில் குழந்தைத் திருமணம் நடந்தது.
- 20 வயதுக்குள் இரண்டு குழந்தைகளுக்கு (3½ வயது, 1½ வயது) தாயானார்.
- திருமணத்துக்குப் பிறகு சூர்யாவுடனான பழைய நட்பு சரவணனுக்குத் தெரியவர, தினமும் குடித்துவிட்டு வந்து முத்துலட்சுமியை அடித்து உதைத்து சித்திரவதை செய்தத் தொடங்கினார்.
- கடந்த ஆண்டு முத்துலட்சுமி இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு சூர்யாவுடன் 8 நாட்கள் ஓடிப்போனார். திரும்பி வந்ததும் சரவணனின் தாக்குதல் மேலும் தீவிரமானது.
“இவன் உயிரோடு இருந்தால் என்னை அடித்தே கொன்றுவிடுவான்… இவன் உயிர் போனால்தான் நான் உயிரோடு இருக்க முடியும்” என கதறி அழுத முத்துலட்சுமியிடம், “பயப்படாத… இதுதான் உன் கண்ணில் வரும் கடைசி கண்ணீர்” என ஆறுதல் கூறிய சூர்யா, கொலையைத் திட்டமிட்டு நிறைவேற்றினார்.
கைது – தலைமறைவு

ஹோசூர் டவுன் போலீஸார் முத்துலட்சுமி (20), சூர்யா, சந்தோஷ் ஆகிய மூவரையும் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். சக்தி தலைமறைவாக உள்ளார்.
இரு சிறு குழந்தைகள் இப்போது அனாதைகளாக…
தந்தையை இழந்தது மட்டுமல்லாமல், தாயும் சிறையில் அடைக்கப்பட்டத் தகுந்த நிலையில், 3½ வயதும் 1½ வயதும் உள்ள இரு குழந்தைகளும் நிர்கதியாகியுள்ளன.

குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்களின் கோரிக்கை
“இந்தக் கொலை மட்டுமல்ல… இதற்குக் காரணமான குழந்தைத் திருமணத்தை அனுமதித்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் (VAO), ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேறு முத்துலட்சுமிகள் உருவாகாமல் தடுக்க வேண்டும்” என வலியுறுத்துகின்றனர்.
16 வயதில் திரும்பு விழுந்த வாழ்க்கை…
18 வயதுக்கு முன்பே தாயானவள்…
20 வயதில் கொலைக் குற்றவாளியானவள்…
இதுதான் குழந்தைத் திருமணத்தின் கொடூர முகம்!

