கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்களும் பூச்சிகளும் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை (பெண்) சமையல் செய்த சத்துணவு ஊழியரிடம் கண்டிப்பாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் முற்றி, இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறியது.

பள்ளி வளாகத்திற்கு அருகே இருவரும் தரையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டையை பார்த்த மாணவர்கள் அச்சமடைந்து கதறி அழுத காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளதால், பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மதிய உணவு திட்டத்தில் உணவின் தரம் குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்து வரும் நிலையில், இச்சம்பவம் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் குழந்தைகளின் உடல்நலத்தையும் கல்வி சூழலையும் பாதிக்கும் என்பதால், உணவு தயாரிப்பில் கடும் கண்காணிப்பு தேவை என்ற குரல்கள் வலுப்பெற்றுள்ளன.
Summary : In Gorakhpur, Uttar Pradesh, worms and insects were found in mid-day meal served to school students, sparking outrage. The headmistress confronted the cook, leading to a heated argument that escalated into a physical fight. A viral video shows the two women brawling while terrified students cry.


