கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஜோதி ராமலிங்கம் - மீனாட்சி தம்பதியினரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. ராமலிங்கம் விவசாயம் செய்து வந்தார். அவரது மனைவி மீனாட்சி, எம்.ஏ., பி.எட். படிப்புகளை முடித்து, அருகிலுள்ள பணிக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
மீனாட்சி ஆசிரியைக்கு அப்பகுதியில் தனி மரியாதை உண்டு. அவர் காலை 8.30 மணிக்கு வீட்டை விட்டு பள்ளிக்கு செல்வார்; மாலை 6 மணிக்கு திரும்பி வருவார். அவரது நேரந்தவறாத பழக்கத்தால், அப்பகுதி மக்கள் கடிகாரம் பார்க்காமலேயே நேரத்தை கணிக்கும் அளவுக்கு அவர் புகழ்பெற்றிருந்தார்.

2004 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி, வழக்கம் போல மீனாட்சி ஆசிரியை உணவு தயாரித்து, மதிய உணவுடன் தனது டிவிஎஸ்-50 மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். ஆனால், அன்று மாலை 6 மணியைக் கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை.
கவலையடைந்த ராமலிங்கம் பள்ளிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பள்ளி நிர்வாகம், அவர் ஏற்கனவே புறப்பட்டுவிட்டதாக தெரிவித்தது. உடனடியாக ராமலிங்கம் பள்ளிக்கு சென்று விசாரித்தார். காவலர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவரும் ஒரே குரலில் மீனாட்சி ஏற்கனவே சென்றுவிட்டதாக கூறினர்.
வீட்டிற்கு திரும்பும் வழியில் உள்ள மருதூர் ரயில்வே கேட் காவலரிடம் விசாரித்த போது, காலையில் பள்ளிக்கு சென்றதை பார்த்ததாகவும், மாலையில் திரும்பி வருவதை பார்க்கவில்லை என்றும் கூறினார்.
அதிர்ச்சியடைந்த ராமலிங்கம், மெட்டுமருதூரில் உள்ள சாலையோரம் கடை நடத்தும் நண்பர் திருப்பதியிடம் விசாரித்தார். அவர், மாலையில் பள்ளியிலிருந்து திரும்பி குளித்தலை நோக்கி சென்றதை பார்த்ததாக கூறினார். இதனால் மீனாட்சி மெட்டுமருதூர் வரை வந்திருப்பது உறுதியானது.
இரவு 11 மணிவரை தேடியும் எதுவும் தெரியவில்லை. உடனே குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. நாட்கள், வாரங்கள், மாதங்கள் கடந்தும் மீனாட்சியின் இருப்பிடம் தெரியவில்லை.
இந்த வழக்கு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமலிங்கம் அடிக்கடி காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தார். ஒருமுறை இன்ஸ்பெக்டர், "பெரிய ஆட்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்; ஆளும் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் தொடர்புடையவர்" என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமலிங்கம், விசாரணையை நிறுத்திவிட்டு அமைதியானார்.
ஊடகங்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் தொடர்புடையதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் விசாரணையில் அது தவறான தகவல் என தெரியவந்தது. இன்ஸ்பெக்டர், ராமலிங்கத்தை அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கிறார் என அவரை தவிர்க்கும் நோக்கில் அவ்வாறு பொய்யான கூறியதாகவும் கூறப்படுகிறது. பெங்களூருவில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.
ராமலிங்கம் சென்று பார்த்த போது, அது மீனாட்சி இல்லை என தெரியவந்தது. 2006-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. ராமலிங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதனால் வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபி-சிஐடி தீவிர விசாரணை நடத்தியது.
2006 ஜூன் 22 அன்று, மெட்டுமருதூர் அருகே ராஜேந்திரன் தோட்டத்தில் வாழை நடவு செய்ய தோண்டிய போது எலும்புக்கூடு கிடைத்தது. உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எலும்புகளுடன் பச்சை நிற சேலை, உடை ஆபரணங்கள் இருந்தன. ராமலிங்கம் அடையாளம் காட்டியதுடன், டிஎன்ஏ பரிசோதனையும் மீனாட்சியே என உறுதிப்படுத்தியது.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் குளித்தலை பாரதி நகரைச் சேர்ந்த சண்முகவேலு (36) மற்றும் மருதூர் குமார் (31) ஆகியோர் சந்தேகத்திற்கு உள்ளானார்கள்.
சண்முகவேலு வேலை இல்லாமல் ஆடம்பரமாக செலவழித்தது, மனைவிக்கு புதிய நகை வாங்கியது ஆகியவை சந்தேகத்தை ஏற்படுத்தின. 2006 ஜூலை 3 அன்று சண்முகவேலு கைது செய்யப்பட்டார். அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, குமாரையும் காட்டிக்கொடுத்தார்.
இருவரும் நண்பர்கள். கட்டட வேலை, மது விற்பனை செய்து வந்தனர். சண்முகவேலுக்கு மீனாட்சி மீது காதல் இருந்தது. அவர் அதிக நகை அணிவதை கவனித்து, கொள்ளையடிக்க திட்டமிட்டனர். ராஜேந்திரன் தோட்டத்தில் மறைந்திருந்து, தேங்காய் குலை வெட்டுவது போல நடித்து, மீனாட்சி வரும் போது குலையை வீழ்த்தி விபத்து ஏற்படுத்தினர்.
பின்னர் இழுத்துச் சென்று நகை கொள்ளையடித்தனர். ஆசை தூண்டுதலால் பாலியல் வன்கொடுமை செய்து, அறிந்துவிடுவார் என அஞ்சி கழுத்தை அறுத்து கொலை செய்தனர். உடலை புதைத்து, மோட்டார் சைக்கிளை அருகிலுள்ள கிணற்றில் போட்டனர். நகைகள், மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டன. 71 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.
2007 மார்ச் 23 அன்று கரூர் நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. 2008-ல் மதுரை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சண்முகவேலு, 2014 செப்டம்பர் 17 அன்று போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தினர் யாருமே தன்னை சந்திக்க வராததால் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மது போதை, கொள்ளை ஆசை, பாலியல் வன்மம் ஆகியவை கலந்த கொடூரம்.
பெண்கள் தனியாக செல்லும் போது பாதுகாப்பு, நகை அணிவது ஆகியவை குறித்த விவாதங்களை எழுப்பியது. 20 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
Summary in English : In 2004, Meenakshi, a punctual school teacher from Kulithalai, Tamil Nadu, was robbed, raped, and murdered by Shanmugavel and Kumar while returning home on her bike. Her skeleton was discovered in 2006, leading to their arrest and life sentences. Shanmugavel later committed suicide in prison.


