ஜனநாயகன் ரிலீஸ் ஒத்தி வைப்பு? சற்று முன் வெளியான தகவல்! இது தான் காரணமா?

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவருமான தளபதி விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழு டிசம்பர் மாதமே சென்சார் போர்டுக்கு படத்தை அனுப்பிய நிலையில், சில காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மாற்றங்களை செய்து மீண்டும் சமர்ப்பித்த போதிலும், இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. 

இதனால் தமிழ்நாட்டில் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது. சில திரையரங்குகள் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகள் என்ற பெயரில் ₹2000 முதல் ₹5000 வரை உயர்த்தி டிக்கெட் விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் சார்பில் மதராஸ் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்சார் போர்டுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட இந்த வழக்கு ஜனவரி 6 ஆம் தேதி பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

சில தகவல்கள் படத்தின் ரிலீஸ் ஜனவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றன. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ஜனவரி 12 ஆம் தேதி, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக CBI விசாரணையில் நடிகர் விஜய் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நிகழ்வுகளும் ஒரே தேதியில் நடப்பது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு முன் வெளியாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Summary in English : Thalapathy Vijay's final film, "Jana Nayagan", faces a delay in receiving its censor certificate despite revisions, prompting the producers to file an urgent petition in the Madras High Court for resolution ahead of the planned January 9 release. Meanwhile, the CBI has issued a notice for Vijay to appear for questioning on January 12 regarding a past crowd incident in Karur.