நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இதுவரை சான்றிதழ் வழங்காததால், படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இன்று (ஜனவரி 7) மதியம் நடைபெற்ற விசாரணையில், தணிக்கை வாரியம் தரப்பில் படத்தை மறுஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி. ஆஷா, வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9ஆம் தேதி காலை வழங்குவதாக அறிவித்தார். இதனால், திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாவதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
படக்குழு தரப்பில், டிசம்பர் 18, 2025இல் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஆரம்பத்தில் U/A சான்றிதழுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ராணுவத்தை தவறாக சித்தரிப்பதாகவும் கூறி ஒரு புகார் வந்ததால், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி தாமதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால், படத்தின் ரிலீஸுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தனியார் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், கார்ப்பரேட் மல்டிபிளெக்ஸ் சங்கிலிகள் சான்றிதழ் வராததால் முன்பதிவை தொடங்கவில்லை.
தீர்ப்பு ரிலீஸ் தேதியான 9ஆம் தேதி காலை வெளியானாலும், சான்றிதழ் உடனடியாக கிடைக்காவிட்டால் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சம் 5 நாட்கள் தாமதம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், இந்த தாமதம் அரசியல் சதி எனக் குற்றம்சாட்டி வருகின்றனர். படம் பொங்கல் விடுமுறையை தாண்டி வெளியானால் வசூல் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் அஞ்சப்படுகிறது. அதிகபட்சம் ஜனவரி 12ஆம் தேதி வரை ரிலீஸ் தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் அல்லது மாற்றங்கள் செய்து சமரசம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Summary in English : The Madras High Court heard the plea from producers of Vijay's film Jana Nayagan seeking a censor certificate from CBFC due to delays. The CBFC requested additional time for review, leading the court to adjourn the case. Judgment is now scheduled for January 9, 2026, the planned release date, creating uncertainty about the film's timely theatrical launch during Pongal.

