தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலஐ! பகீர் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகர்!

சென்னை : பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.ராஜன் (85) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் சற்று முன் வெளியிட்ட வீடியோவில் தனது நண்பரை நினைவுகூர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பேசியுள்ளார்.

எஸ்.வி.சேகர் தனது வீடியோவில், “என்னுடைய அருமை நண்பர் கே.ராஜன். திரைப்பட தயாரிப்பாளர், டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் அசோசியேஷன் பிரசிடெண்ட், நடிகர் சங்க உறுப்பினர், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர். சினிமா துறையில் பல தரப்பட்ட துறைகளிலும் ஆழமான கால் பதித்தவர். எனக்கு 50 வருஷமாக பழக்கம்” என்று குறிப்பிட்டார்.

நாடகம் முதல் திரைப்படம் வரை...

ராஜன், ஐஸ்வர்யா வேலன் நாடகங்களில் இணைந்து பணியாற்றியவர். ராஜா அண்ணாமலை மன்றத்தில் பல நாடகங்கள் நடைபெற்றபோது அவரும் பங்குதாரராக இருந்தார்.

1983-ல் வெளியான பிரம்மச்சாரிகள் படம் அவரது முதல் தயாரிப்பு. அந்தப் படத்தில் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள் நடித்தனர். அதன்பின் பல படங்களைத் தயாரித்து, இயக்கவும் செய்துள்ளார்.

திருட்டு வீடியோவுக்கு எதிரான போராட்டம்

கே.ராஜனின் மிகப் பெரிய பலம் என்னவென்றால், “மனசுல பட்டதைப் பட்டவாறு சொல்வார். ஒளிவு மறைவு கிடையாது” என்கிறார் எஸ்.வி.சேகர். திருட்டு வீடியோ (வீடியோ பைரசி)க்கு எதிராக பல வருஷங்கள் தொடர்ந்து போராடிய ஒரே நபர் ராஜன் தான். அந்தப் போராட்டத்தில் கைது உள்ளிட்ட பிரச்னைகளையும் சந்தித்துள்ளார்.

பண உதவி, தனிப்பட்ட வாழ்க்கை

பலருக்கு படங்களுக்கு பைனான்ஸ் செய்து, கோடிக்கணக்கான பணத்தை கடனாகக் கொடுத்துள்ளார். சிலர் திருப்பித் தராததால் அவரே பாதிக்கப்பட்டார். இரண்டு வருஷம் முன்பு எஸ்.வி.சேகரிடம், “எவ்வளவோ பணம் கொடுத்தேன். ஒன்றும் திரும்பி வரமாட்டேங்குது” என்று கூறியதாக எஸ்.வி.சேகர் நினைவுகூர்ந்தார்.

சுமார் நாலைந்து வருஷங்களுக்கு முன்பு மனைவியை இழந்த ராஜன், ஒரு மகள் மற்றும் இரு மகன்களுடன் இருந்தும், சமீபகாலமாக நொங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார். வீட்டில் சமீபத்தில் வேறொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நடந்துள்ளதாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

“தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?”

85 வயதில், நல்ல உடல்நிலையுடன் இருந்த ராஜன் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சி என்று எஸ்.வி.சேகர் வலியுறுத்தினார். “நல்ல ஹெல்த்தியாக, டாலாக இருப்பார். வாக்கிங், உடற்பயிற்சி எல்லாம் செய்வார். பயில்வான் ரங்கநாதருடன் கூட மோதல்கள் இருந்துள்ளன” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “உயிரோடு இருந்து இயற்கையாக இறந்திருந்தால் கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்திருக்கலாம். ஏழு பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கலாம். இப்போது யாருக்கும் பிரயோஜனம் இல்லை” என்று வருத்தம் தெரிவித்த எஸ்.வி.சேகர், பணம் வாங்கியவர்கள் குடும்பத்துக்கு திருப்பிக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

“வாழ்க்கை என்பது போராடி ஜெயிப்பது”

தற்கொலை செய்துகொள்வதை பெரிய பரபரப்புச் செய்தியாக்காமல், நேர்மறையான செய்திகளை ஊக்குவிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கூறினார். மன அழுத்தத்தை தாங்க முடியாதவர்கள் கவுன்சிலிங் எடுக்குமாறும், குடும்பத்தினர் ஆதரவு அளிக்குமாறும் அறிவுறுத்தினார்.

“எல்லாருக்கும் கஷ்டம் இருக்கு. அதைத் தாண்டி ஜெயிப்பதுதான் வாழ்க்கை. அடுத்த தலைமுறைக்கு உதாரணமாக வாழ்ந்து விட்டுப் போக வேண்டும்” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசிய எஸ்.வி.சேகர், கே.ராஜனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ததுடன், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தார்.

Summary in English : Veteran film producer and distributor K Rajan has passed away at the age of 85. In a recent video, actor S Ve Sekar remembered their 50-year friendship, Rajan’s contributions to theatre and cinema, his firm stand against video piracy, and his generous help to many in the industry.