கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நல்லட்டிப்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டனர். சமீபத்தில் பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதியில் இளம்பெண் மாயமானது தொடர்பான புகார்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
அப்பகுதியில் உள்ள சுமார் 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆராய்ந்தனர். குறிப்பாக கிணத்துக்கடவு, கோவில்பாளையம், வடச்சித்தூர், வடக்கிபாளையம் மற்றும் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள கேமராக்கள் பரிசீலிக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.
நடுங்க வைக்கும் CCTV காட்சி
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவில் ஒரு மோட்டார் சைக்கிள் அடிக்கடி வந்து செல்வதும், அன்றைய தினம் திடீரென தீப்பிடித்து எரியும் நடுங்க வைக்கும் காட்சியும் பதிவாகியிருந்தது.
அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில், அது பொள்ளாச்சியிலிருந்து வந்ததும், இருவர் பயணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொள்ளாச்சி பகுதியில் விசாரணையை குவித்தனர்.
விசாரணையில் உயிரிழந்த பெண், பொள்ளாச்சி வட்டம் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த லோகநாதனின் மனைவி சங்கீதா (30) என்பது உறுதியானது. சங்கீதா பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் பொள்ளாச்சி அச்சிப்பட்டியைச் சேர்ந்த பழனிமுத்து (35) என்பவரும் பணியாற்றி வந்தார்.
பழனிமுத்துவுக்கு மனைவியும், 13 வயது மற்றும் 7 வயதுள்ள இரு மகன்களும் உள்ளனர். அவரது தந்தை குருநாதன் (60). இவர்கள் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சிக்கு குடிபெயர்ந்தனர். அதன்பிறகு தந்தையும் மகனும் அதே ஜவுளிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தனர்.
ஜவுளிக் கடையில் பணியாற்றும்போது பழனிமுத்துவுக்கும் சங்கீதாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. பழனிமுத்து ஏற்கனவே திருமணமானவர். அவரது மனைவி கணவனின் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டு சந்தேகப்பட்டு, ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் கணவன் சங்கீதாவுடன் தகாத தொடர்பில் இருப்பதை அறிந்து சண்டையிட்டார். அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் மூன்று ஆண்டுகளாக இந்த தொடர்பு தொடர்ந்தது. வெறுத்துப்போன மனைவி, “இனி உன்னுடன் வாழ மாட்டேன்” என்று சொல்லி இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த விவகாரம் ஜவுளிக் கடை முழுவதும் பரவியது. கடையின் முதலாளி இருவரையும் வேலையை விட்டு நீக்கினார். அதன்பிறகு பழனிமுத்து பொள்ளாச்சியில் உள்ள மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார்.

சங்கீதாவின் கணவர் விசாரித்தபோது, கள்ளத் தொடர்பு காரணமாகவே வேலை நீக்கம் செய்யப்பட்டது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கீதா, “இனி உன்னுடன் வாழ மாட்டேன். பழனிமுத்துவுடன் தான் வாழப் போகிறேன்” என்று சொல்லி கணவனைப் பிரிந்து பழனிமுத்துவிடம் சென்றார்.
பழனிமுத்து கிணத்துக்கடவு காமராஜர் நகரில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து சங்கீதாவுடன் குடும்பம் போல வாழத் தொடங்கினார். ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல, சில வாரங்களிலேயே பணப் பிரச்சினை காரணமாக தகராறுகள் அடிக்கடி ஏற்படத் தொடங்கின.
உடலுறவு வச்சிக்கிட்டா சரியாகிடும்

சம்பவம் நடந்த இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பழனிமுத்து சங்கீதாவை அமைதிப்படுத்த முயன்றார். உடலுறவு வச்சிக்கிட்டா சரியாகிடும் என்று சங்கீதாவை உல்லாசமாக இருக்க அழைத்தார். ஆனால், சங்கீதா மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் அவர் வீட்டில் இருந்த ஒரு கருவியை எடுத்து சங்கீதாவைத் தாக்கினார். அந்தத் தாக்குதலில் மயங்கினார். ஒரு கட்டத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். ஆம், சங்கீதா உயிரிழந்தார்.
ஒரே நேரத்தில் கணவனும் மாமனரும்..
நடந்ததை உணர்ந்த பழனிமுத்து பயந்துபோய் தனது தந்தை குருநாதனுக்கு தொலைபேசியில் அழைத்து நடந்ததைச் சொன்னார். குருநாதன் உடனடியாக பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவுக்கு வந்தார். இருவரும் சேர்ந்து சங்கீதாவின் உடலை ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றனர்.

கோவில்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிய பிறகு, பழனிமுத்து பணிபுரியும் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றனர். அங்கு உடலை வைத்து, அதன் மீது பெற்றோர் ஊற்றி எரித்தனர்.

மறுநாள் காலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள், வாகனப் பதிவு எண், பெட்ரோல் பங்கு விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் பழனிமுத்துவைக் கண்டுபிடித்தனர். அவர் தொழிற்சாலைக்கு வேலைக்கு வராமல் தலைமறைவாக இருந்தார்.
அவரைப் பிடித்து விசாரித்தபோது உண்மை வெளியானது. கொலையை மறைக்க உதவிய தந்தை குருநாதனையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறிந்து, சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் விரைவில் கைது செய்த போலீசாரின் விசாரணை பாராட்டத்தக்கது.
இந்த துயரச் சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், தவறான வழிகளில் செல்வதால் ஏற்படும் விளைவுகளையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.


