கட்டு கட்டாக சலவை நோட்டு, குவியல் குவியலாக தங்க நகை, திருட்டு நடந்தது எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

✦ ஆன்மிகம்   •  

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டன் குடியிருப்பில், பிரபல யூடியூபர் வினோத்குமார்–மதுமிதா தம்பதியினர் வீட்டில் நேற்று இரவு கொள்ளை நடந்தது.

மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, 118 சவரன் தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஐபி கார்டன் பகுதியில் பல்வேறு தரப்பினர் புதுமனை வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். சுற்றுவட்டாரத்தை தனியார் காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த வினோத்குமார்–மதுமிதா தம்பதியினர், தங்களது யூடியூப் சேனலில் அதிக அளவு நகைகள் மற்றும் கட்டுகட்டுப் பணத்துடன் இடம்பெற்ற வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

நகைக்கடைக்குச் சென்று நகை வாங்கும் விலாக் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவேற்றி வந்தனர். அந்த வீடியோக்களில் எங்கு செல்கிறார்கள், எவ்வளவு நகை வாங்குகிறார்கள், காரின் மதிப்பு என்ன, வங்கிக் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்பது குறித்து மதுமிதா விரிவாகப் பேசுவது வழக்கமாக இருந்தது.

இந்த வீடியோக்களுக்கு கருத்துப் பகுதியில் பலர் மதுமிதாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். தற்போது இந்த கொள்ளைச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இவர்களின் வீடியோ பதிவுகள் குறித்த விமர்சனம் மீண்டும் எழுந்துள்ளது.

தங்களது சொத்து மதிப்பு மற்றும் நகை விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டதே இந்தச் சம்பவத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் நெட்டிசன்களிடையே பரவி வருகிறது.

இந்த விஐபி கார்டன் பகுதியில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வசிப்பவர்களில் பலர் அறியப்பட்ட நபர்கள் என்பதால், ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில், சுற்றிலும் கண்காணிப்பு அமைப்புகள் இருக்கும் நிலையில் இந்த கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேமராக்கள் மற்றும் தனியார் காவலர்கள் இருந்தும் எவ்வாறு இந்தச் சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து வருகின்றனர். கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு, சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் அடையாளம் குறித்து விசாரணை தொடர்கிறது.

Summary in English : YouTuber couple Vinothkumar and Madhumitha, living in VIP Garden near Nagercoil, reported a night-time house break-in through the rear door. About 118 sovereigns of gold jewellery and cash were taken. 

Rajakkamangalam police are investigating. The couple had posted vlogs showing jewellery purchases, car value and bank details, drawing public comment. Cameras cover the gated area, and residents have expressed concern.