நடிகை சமீரா ரெட்டி தனது உடல் தோற்றம், உடல் எடை மற்றும் வயது தொடர்பான விஷயங்களில் நேர்மறையான பார்வையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் செய்திகள் பலருக்கும் உத்வேகமாக அமைகின்றன. ஒருவரின் உடலை வைத்து தாழ்வு மனப்பான்மை கொள்ளக் கூடாது, தன்னை குறைவாக எடை போட்டுக்கொள்ளக் கூடாது என்பதே அவரது நிலைப்பாடு.
ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அது அவர்களின் அடையாளம். அதை கொண்டாட வேண்டும். உயிரைத் தாங்கி நிற்கும் உடலை வெறுக்கக் கூடாது.

நாம் குண்டாக இருக்கிறோம் அல்லது மிகவும் ஒல்லியாக இருக்கிறோம் என்ற காரணத்தால் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொள்ளும் போக்கும், பிறரின் உடலை வைத்து கேலி செய்யும் போக்கும் இருக்கக் கூடாது என அவர் வெளிப்படையாக பேசி வருகிறார்.

கடந்த காலத்தில் அவர் பகிர்ந்த ஒரு கருத்து இன்னும் நினைவில் இருக்கிறது. “என்னுடைய தொடைகள் தளர்ந்துவிட்டன. என்னுடைய முடி நரைத்துவிட்டது. என்னுடைய தோளில் சுருக்கங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. ஆனாலும் என்னை நான் கவர்ச்சியாகவே உணர்கிறேன். என்னை அழகாக உணர்கிறேன்” என கூறியிருந்தார். அந்த நேர்மையான பகிர்வு பலரையும் தொட்டது.
தற்போது மீண்டும் தனது உடல் சார்ந்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். புகைப்படங்களுடன் அவர் எழுதியிருப்பதாவது: “நான் என்னை எப்படி எல்லாம் அழைக்க வேண்டும் என விரும்புகிறேன். இதைச் சொல்வதற்கு எனக்கு கூச்சமில்லை.”

அதன்படி தன்னை Plumpy, Thicc, Curvy, Chubby, Chunky, Golu என வர்ணிப்பதை தான் விரும்புவதாகவும், அதுதான் சரியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வீடியோவில் வெவ்வேறு உடைகளில் தன் உடலை நம்பிக்கையுடன் காட்டிக்கொண்டே இந்த வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

பதிவின் செய்தி இதுதான்: நீங்கள் பிரபலம் ஆக இருந்தாலும், தன்னைத் தேடிக்கொண்டிருக்கும் இளம் பெண்ணாக இருந்தாலும், புதிய தாயாக இருந்தாலும், நீண்ட காலம் தீர்ப்புகளுக்கு உள்ளான பெண்ணாக இருந்தாலும், அல்லது இந்த வார்த்தைகளை கேட்க வேண்டிய ஒருவராக இருந்தாலும் — உங்கள் உடல் உங்களைக் கேட்கிறது. வேறு யாரெல்லாம் என்ன சொன்னாலும் அதை நீங்கள் நேசிக்க வேண்டும். Curvy, Beautiful, Luscious You.

மேலும் “உங்கள் அழகை நீங்கள் எப்படி அழைக்க விரும்புகிறீர்கள்?” என கமெண்ட் பிரிவில் கேட்டுள்ளார். #bodypositivity #imperfectlyperfect என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்த பதிவு வெளியாகியுள்ளது.
சமீரா ரெட்டி பல ஆண்டுகளாக இதே கருத்தை முன்வைத்து வருகிறார். தாய்மைக்குப் பிறகு உடல் மாற்றம், நரை முடி, சுருக்கங்கள் ஆகியவற்றை மறைக்காமல் பகிர்ந்து, “நான் 82 கிலோ எடை உள்ளவள்” என வெளிப்படையாக சொல்லி வந்தவர். சமூக வலைதளத்தில் வடிகட்டப்பட்ட படங்களை மட்டும் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொள்ளும் பெண்களுக்கு இது ஒரு மாற்றுக் குரல்.

உடல் என்பது ஒருவரின் தோற்றம் மட்டுமல்ல. அது வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் கருவி. அதை வெறுப்பதற்குப் பதில் ஏற்றுக்கொண்டு கொண்டாடுவதே ஆரோக்கியமான அணுகுமுறை என்பதை இந்தப் பதிவு மீண்டும் நினைவூட்டுகிறது. சமீரா ரெட்டியின் இந்த நேர்மையான பகிர்வு பலரிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Summary in English : Sameera Reddy shared a confident Instagram post celebrating her body and asking to be called plump, thicc, curvy, chubby, chunky and golu. She said there is no shame in it and that every body deserves love, not judgment. She urged people to accept themselves instead of feeling lesser for how they look.