ரோஹினி தியேட்டர் விவகாரம்..! – பிரியா பவானி ஷங்கர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தமிழில் வளர்ந்துவரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் பிரியா பவானி ஷங்கர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில், செய்தி வாசிப்பாளராக ஆரம்பத்தில் இருந்த இவர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

மேயாத மான், யானை, திருச்சிற்றம்பலம், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், குருதி ஆட்டம் மற்றும் சமீபத்தில் வெளியான அகிலன், பத்து தல படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்தியன் 2 படத்திலும், இவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான பத்து தல படத்தை பார்க்க, தியேட்டருக்கு சென்ற நரிக்குறவ இன பெண்கள், குழந்தைகளை தியேட்டருக்குள் அனுமதிக்காத விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இ்ந்த சம்பவம் குறித்து, இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர், தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கரும் டிவிட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் குறித்த தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், அந்த தியேட்டருக்கு படம் பார்க்க வந்த மற்றவர்கள் எல்லாம், அவரவர்கள் வேலையை பார்த்துக்கொண்டு போன நிலையில், ‘படம் பார்ப்பதற்கான டிக்கெட் அவர்களிடம் இருக்கும்போது, அவர்களை ஏன் தியேட்டருக்குள் விட மாட்டேன், என்கிறீர்கள்?’ என முதலில் கேள்வி கேட்ட அந்த குரல்தான், இந்த தீண்டாமை செயலுக்கு எதிராக ஒலித்த முதல் குரல்.

நாகரிகமாக உடை அணிந்து, அவர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வரவில்லை என்பது, தியேட்டர் நிர்வாகிகளின் பிரச்னை என்றால், அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய, அடைய வேண்டிய நாகரிகம் என்பது, இன்னும் வெகு தொலைவில் உள்ளது, என்றும் அந்த பதிவில் பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார். இந்த பதிவுக்கு, சினிமா ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

--Advertisement--