வணக்கம் வணக்கம் வணக்கம்...! அள்ள அள்ள பணம்..! என்ற தலைப்பில் பங்கு சந்தையில் பணம் அள்ளுவது எப்படி என ஐந்து பகுதிகளை நாம் பார்த்து விட்டோம். ஒரு வேளை, அவற்றை படிக்காமல் நேரடியாக இங்கே வந்திருந்தால் தயவு செய்து கீழே உள்ள லிங்க்குகளை பயன்படுத்தி அந்த இரண்டு பகுதிகளையும் படித்து விட்டு வாருங்கள். அப்போது தான் இந்த பகுதியை புரிந்து கொள்ள முடியும்.
சரி வாங்க இன்றைய பகுதிற்குள் செல்லலாம். சென்ற பதில் பங்குகளை எப்படி வாங்கி விற்பது என்று பார்த்தோம். Long என்றால் வாங்கி விற்பது. இதில், விலை ஏறினால் நமக்கு லாபம். Short என்றால் விற்றுவிட்டு வாங்குவது. இதில், பங்கின் விலை இறங்கினால் நமக்கு லாபம். அவ்வளவு தான்.
தற்போது தான் சிக்கலே ஆரம்பிக்கின்றது. Invest செய்ய எப்படி பங்குகளை தேர்வு செய்வது.? Trade செய்ய பங்குகளை எப்படி தேர்வு செய்வது..? என்பதை நாம விரிவாக பார்ப்போம்.
இது மிகவும் கடினமான விஷயம். எந்த பங்கை தேர்வு செய்வது என்பதில் தான் மார்கெட்டில் உள்ள 95% பேர் கோட்டை விட்டுவிடுகிறார்கள். அப்படி என்ன தான் இதில் கஷ்டம் இருக்கிறது என கேட்கிறீர்களா..?
சொல்கிறேன், Trading என்று வரும் போது பொத்தாம் பொதுவாக ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து விலை ஏறும் என்றால் Long செய்யலாம். விலை இறங்கப்போகிறது என்றால் Short செய்யலாம். ஆனால், Investing என்பது அப்படி கிடையாது. அது நீண்ட கால பயிர். ஒரு விதை நெல்லை விளை நிலத்தில் போட்டால் தான் நமக்கு பலன் தரும். மாறாக, தார் ரோட்டில் போட்டு விட்டு என்னுடைய நெல் வீணாக போய்விட்டதே என்று எத்தனை கூப்பாடு போட்டாலும் நமக்கு பலன் தராது.
சந்தையில் உள்ள நிறுவனங்களில் எது சிறந்த நிறுவனம். அவற்றை எப்படி கண்டறிவது. எதிர்பார்த்த லாபத்தை பெற எத்தனை மாதம் காத்திருக்க வேண்டும். போன்ற விஷயங்களை முதலில் நாம் ஆராய வேண்டும்.
இவற்றை கண்டறிய சந்தையில் உள்ளவர்கள் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். அவற்றில் முக்கியமான இரண்டு விஷயங்களை இங்கே நாம் பார்க்கலாம்.
1. Technical Analysis
2. Fundamental Analysis
1.Technical Analysis (டெக்னிக்கல் அனாலிசிஸ்)
டெக்கினிக்கல் என்றவுடன் பயந்துவிடவேண்டாம். இது மிகவும் எழிமையானது தான். இப்போது ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக, SBI வங்கியை நாம் இங்கே எடுத்துக்கொள்வோம்.
இந்த பங்கின் விலை ஏற்ற இறக்கத்தை நாம் Chart எடுத்து பார்க்க வேண்டும். என்னது..? Chart எடுத்து பாக்கணுமா...? அதுக்கு நான் எங்க போறது..? என்று கேட்கிறீர்களா...? எங்கும் அலைய வேண்டாம், அனைத்தும் உள்ளங்கைக்குள் இருக்கின்றன. பல வளைத்தளங்களில் நம்மால் எந்த நிறுவனத்தின் Chart-ஐ வேண்டுமானாலும் எடுத்து பார்க்க முடியும்.
நான் உபயோகிக்கும் தளமான Investing.com சிறப்பாகவும், உபயோகிக்க எளிதாகவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல தளங்கள் உள்ளன. அதனை நீங்களே கூகுள் செய்து உங்களுக்கு எது எளிமையாக இருக்கிறதோ அதனை பயன்படுத்திக்கொள்ள்ளலாம்.
சரி, Chart-ஐ எடுத்தாகி விட்டது. எப்போது என்ன செய்யவேண்டும் என்பதை பாப்போம். இந்த Chart-ஐ பல விதங்களில் பார்க்கலாம். அதாவது, 1 Minute, 3 Minute, 5 minute, 10 Minute, 15 Minute, 1 Hour என விதவிதமான நேர அளவீடுகளில் நாம் பார்க்கலாம்.
Chart-ல் பல வகைகள் உள்ளன. Bar chart, Candle Stick Chart, Heikin Ashi Chart, Renko Chart, Kagi Chart என பல பற்பல Chart-கள் நமக்கு கிடைகின்றன. அதில், அதிகம் பேர் பயன்படுத்தக்கூடியதும், அனலைஸ் செய்ய எதுவானதாகவும் இருக்க கூடிய Candle Stick Chart-ஐ பற்றி இங்கே நாம் பாப்போம்.
அப்போது, மற்ற Chart-கள் எல்லாம் பயனற்றதா என்றால்.. அப்படி இல்லை. Candle Stick Chart என்பது அனலைஸ் செய்வதற்கு ஈசியாக இருக்கும் அவ்வளவு தான். நீங்கள், மற்ற Chart-களை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், யூ-ட்யூபில் தட்டினால் போதும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
இப்போது, Candle Stick Chart-ஐ பற்றி பாப்போம்.இதோ, நீங்கள் கீழே பார்ப்பது தான் Candle Stick Chart. மெழுகுவர்த்தி போல சிகப்பு மற்றும் பச்சை கலரில் குச்சி குச்சியாக இருக்கிறதல்லவா... இது தான் கேண்டில் ஸ்டிக் சார்ட்.
இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன்பு கேண்டில் எப்படி பிரிண்ட் ஆகின்றது. அதில், நாம் என்னென்ன தெரிந்து கொள்ளலாம் என்பதை பாப்போம். அதற்காக, சிகப்பு கேண்டிலில் ஒன்று பச்சை கேண்டிலில் ஒன்று என இரண்டு கேண்டிலை மட்டும் நாம் எடுத்துக்கொள்வோம்.
வாங்க பாக்கலாம். கொஞ்சம் சூதானமாக கவனியுங்கள். நன்கு மண்டையில் ஏறிக்கொண்டால் மார்கெட்டில் சுலபமாக முடிவுகளை எடுக்கலாம்.
முதலில், பச்சை கேண்டிலை எடுத்துக்கொள்வோம். இதனை மார்கெட்டில் புல்லிஷ் கேண்டில் (Bullish Candle) என்று கூறுவார்கள். விலை ஏறினால் சார்ட்டில் இந்த பச்சை கலர் கேண்டில் பிரிண்ட் ஆகும்.
இதில், கவனிக்க வேண்டியது என்ன என்று வாங்க பார்க்கலாம்.கீழே உள்ள புகைப்படத்தில்,தொடக்க விலை, முடிந்த விலை, இதுவரை ஏறியது, இதுவரை இறங்கியது என்று நான்கு விஷயங்களை தமிழில் எழுதியுள்ளேன் பாருங்க. அது தான் விஷயமே.
தொடக்க விலை என்றால், அந்த நிமிடத்தில் எந்த விலைக்கு தொடங்கியது என்பதாகும். எந்த விலைக்கு முடிந்தது என்பது முடிந்த விலை.
முன்பு பார்த்தோம் அல்லவா..? 1 minute Chart, 2 Minute Chart, 3 Minute Chart, 5 Minute Chart என்று, அந்த நேர அளவை பொருத்தான் கேண்டில்கள் உங்களுக்கு பிரிண்ட் ஆகும்.
ஒரு வேலை நீங்கள் ஐந்து நிமிட கேண்டில் ஸ்டிக் சார்ட் வைத்திருந்தால் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை புதிய கேண்டில் ஸ்டிக் பிரிண்ட் ஆகும். அதுவே, ஒரு நிமிடம் என்றால் நிமிடத்திற்கு நிமிடம் புதிய கேண்டில் பிரிண்ட் ஆகும்.
அடுத்து, சிகப்பு நிற கேண்டில். இதனை மார்கெட்டில் பீரிஸ் கேண்டில் (Bearish Candle) என்று கூறுவார்கள். விலை இறங்கும் போது இந்த கேண்டில் பிரிண்ட் ஆகும்.
இதற்கும், புல்லிஸ் கேண்டிலுக்கும் சிறு வித்தியாசம் தான்.பச்சை நிற கேண்டிலில் தொடக்க விலை என்பது கேண்டிலின் கீழே இருக்கும். சிகப்பு கேண்டிலில் தொடக்க விலை மேலே இருக்கும்.
காரணம், தொடக்க விலையில் இருந்து கீழே வந்து முடிந்தால் அது விலை இறங்குகின்றது. எனவே, அது பீரிஸ் கேண்டில். தொடக்கவிலையில் இருந்து விலை ஏறி மேலே முடிந்திருக்கின்றது எனவே அது புல்லீஷ் கேண்டில்.
அது சரி, இரண்டு கேண்டிலிலும் திரி போல மேலே ஒரு கோடு, கீழே ஒரு கோடு உள்ளதே என்ன அது...? என்று கேட்கிறீர்களா..? அந்த நிமிடத்தில் எந்த அளவுக்கு இறங்கியது, எந்த அளவுக்கு ஏறியது என்பதை குறிப்பது தான் அது.
அந்த திரியில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. சிகப்பு கேண்டிலோ, பச்சை கேண்டிலோ.. மேலே உள்ள திரியின் நீளம் பெரிதாக இருந்தால், அந்த பங்கினை விற்பதற்கு பலர் ஆர்வம் காட்டுகிறார்கள் (Selling Pressure) என்று அர்த்தம். அதே சமயம், கீழே உள்ள திரியின் நீளம் பெரிதாக இருந்தால் அந்த பங்கினை வாங்குவதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள் (Buying Pressure) என்று அர்த்தம்.
இன்று இது போதும், அடுத்த பதிவில், Technical Analysis-ன் தொடர்ச்சியையும் பங்கின் விலை ஏறப்போகிறதா..? அல்லது இறங்கப்போகிறதா..? என்று எப்படி கணிப்பது என்பதை தொடர்ந்து பார்க்கலாம். இந்த பதிவை முழுமையாக ஒரு முறைக்கு இரு முறை படித்து புரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. Investing.com சென்று ஏதாவதொரு நிறுவனத்தின் Chart-ஐ எடுத்து பாருங்கள். அல்லது, Investing.Com-ஐ எப்படி உபயோகிப்பது என்று youtube-ல் தட்டுங்கள். அதில் இன்னும் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்த பதிவில் விரைவில் சந்திக்கிறேன். நன்றி நண்பர்களே.உங்களது சந்தேகங்களை நம்முடைய முகநூல் பக்கங்களில் கேட்கலாம் நண்பர்களே. உங்களுக்கு பதிலிக்க நான் காத்திருக்கிறேன்.
தொடர்ந்து வரும், பதிவுகளை தவற விடமால் பார்க்க இந்த ( https://www.facebook.com/tamizhakamsmt/ ) முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது, (https://t.me/tamizhakamsmt) என்ற Telegram Channel-ல் இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பதிவுகளின் லிங்குகளை நான் அவற்றில் உங்களுக்கு பகிர்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.
உங்களிடம் டெலிகிராம் ஆப் இல்லையென்றால் தயவு செய்து இன்ஸ்டால் செய்து நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதில், அனைத்து பதிவுகளின் லிங்குகள். அவ்வபோது செய்யப்படும் அப்டேட்டுகள் உங்களுக்கு தவறாமல் கிடைக்கும்.







