பிரபல இந்தி நடிகரான நானா படேகர் ‘காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். இவர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார்.
அதில், கடந்த 2008- ம் ஆண்டு வெளியான `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது, என்னுடைய மர்ம இடங்களில் நானா படேகர் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததார் எனவும், “ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்று சத்தமாகக் கூறினார்.
இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளாகினேன். என்னுடைய குடும்பத்தாரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்” என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார்.
இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக விசாரித்து வந்த மும்பை காவல்துறை தனது அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்துள்ளது, அதில் பாலியல் புகாரில் நானா படேகருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், எனவே விசாரணையை முடித்துக்கொள்வதாகவும் மும்பை காவல்துறை கூறியுள்ளது.


