கடற்கரை பகுதியில் விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம் - அடித்தது ஜாக்பாட்.!


அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்த நபர் டெய்லர் இவனோப். சமீபத்தில், அங்குள்ள கடற்கரை பகுதி ஒன்றிற்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார். 

அப்போது, பாட்டில் ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். அதனருகில் சென்ற அவர் யாரவது குடித்து விட்டு இங்கே வீசி சென்றிருப்பார்கள் என்று தான் நினைத்தார். ஆனாலும், அதை எடுத்துப்பார்த்தார். 

அதற்குள் ஒரு காகிதம் சுற்றிய நிலையில் இருந்தது. இதையடுத்து அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என அறிந்துகொள்ளும் ஆவலுடன் பாட்டிலை திறந்தார். 


அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவர் எடுத்த படித்த அந்த கடிதம் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ரஷிய மொழி தெரியாது என்பதால் குழம்பி போன இவர் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து விவரத்தை கூறி  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.


அதனுடன், ரஷிய மொழி தெரிந்தவர்கள் யாராவது கடிதத்தில் இருப்பதை மொழி பெயர்த்து சொன்னால், நன்றாக இருக்கும் என்று அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். 

டெய்லர் இவனோப்பின் இந்த பதிவு முகநூலில்  அதிகம் பகிரப்பட்டு விரலானது. அதில் ஒருவர் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை மொழிபெயர்த்து குறிப்பிட்டார். 

அந்த கடிதத்தில் “வணக்கம், ரஷிய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து எழுதுகிறேன். இதைக் கண்டுபிடிப்பவர்கள் “எண் 43, V.R.X.F சுலாக் விலாதிவோஸ்தோக்” என்ற முகவரிக்கு பதில் எழுதுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும், அதை எழுதியவர் கேப்டன் அனடோலி போட்சனேகோ என்றும் தெரிய வந்தது. கடந்த ஜூன் 20, 1969 என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அறிந்த ரஷிய செய்தி நிறுவனம் ஒன்று கேப்டன் அனடோலி போட்சனேகோவை வலை வீசி கண்டு பிடித்தது. 

இது குறித்து அவரிடம் இந்த கடிதம் பற்றி கேட்டனர். அப்போது, வியந்து போன அவர் அவர் “ எனக்கு 35 வயதில் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இதை விளையாட்டாக செய்தேன். இந்த கடிதம் எதுவரை போகும் என்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அனுப்பினேன்” எனக்கு இப்போது 85 வயது ஆகின்றது. அந்த கடிதத்தை இப்போது தொட்டுப்பார்த்து முத்தமிட மிகவும் ஆவலாக உள்ளேன். அதை வைத்திருப்பவர் என்னை தொடர்புகொள்ள சொல்லுங்கள் அதற்க்கான சன்மானத்தையும் நான் கொடுக்கிறேன் என்று வியந்தபடி மகிழ்ச்சியாக கூறினார்.