ஆழ்துளை கிணற்றை மூடி போட்டு மூட வேண்டியது தானே..? - சுஜித்தின் பெற்றோரை திட்டுபவர்கள் அறிய வேண்டிய உண்மை தகவல்


இன்று தேதி அக்டோபர் 29, 2019. கடந்த, 25-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05: 40 மணிக்கு குழிக்குள் விழுகிறான் சுஜித். மாலை மங்கிய நேரம். ஆதவன் தன்னுடைய வெளிச்சத்தை விரைவாக குறைத்துக்கொண்டே மறைகிறான். 

தன் குழந்தை கிணற்றில் விழுந்ததைப் பார்த்து பதறிப் போய் ஓடி வருகிறார் தாய் கலா மேரி. ஆனால், முடியவில்லை. அவர் போட்ட கூச்சலில் ஊரே கூடுகிறது. அடுத்த அரைமணி நேரத்தில் காவல்துறைக்கு தகவல் போகின்றது. காவல் துறை மூலம் தீயணைப்புப் படையினருக்கு தகவல் போகிறது. அவர்களும் விரைந்து வருகிறார்கள்.

பிறகு என்னநடந்தது என்று உங்கள் அனைவர்க்கும் தெரியும். ஆனால், வெள்ளிகிழமை 05:40 முன்னால் அரை மணி நேரத்தில் என்ன நடந்தது என்று பலருக்கும் தெரியாது. அதற்க்கான பதிவு தான் இது. 

சமூக வலைதளங்களில் சிலர் அந்த குழந்தையின் பெற்றோரை திட்டி பதிவிடுவதை பார்க்கிறோம். அதனால், உண்மையில் என்ன நடந்தது..? என்ற விசாரணையில் அந்த குழந்தையின் தாயிடம் இருந்து நமக்கு கிடைத்த தகவலை தான் நாம் கீழே பார்க்கப்போகிறோம். 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு 300 அடிக்கும் அதிகம் உள்ள ஆழ்துளை கிணற்றில் சுஜித் மாட்டிக் கொள்கிறான். நான்கு நாள் கழித்து பிணமாக மீட்கப்படுகிறான்.

இப்படியிருக்க குழந்தையின் சோகத்தில் இருக்கும் பெற்றோர் மீது குற்றச்சாட்டுகளையும் வசவு வார்த்தைகளையும் வீசுகிறார்கள். உண்மையில் நடந்தது என்ன.? 

வாங்க பாக்கலாம். சுஜித் அகப்பட்டு இருக்கும் அந்த ஆழ்துளை கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள நிலத்தில்தான் சுஜித்தின் அப்பாவும், பெரியப்பாவும் 100 மீட்டர் இடைவெளியில் ஆளுக்கு ஒரு வீடு கட்டி அதில் வாழ்ந்து வருகின்றனர். 

அந்த வீடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் தான் அந்த போர்வெல் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் அதில் நீர் பொய்த்துப் போகவே அந்த ஆழ்துளைக் கிணற்றை குப்பை மற்றும் மண் மற்றும் கற்களை கொண்டு மூடியுள்ளனர். 

அதில், இடப்பட்ட ஒரு பெரிய கல் ஆழ்துளை கிணற்றின் ஆறடி ஆழத்திலேயே சிக்கிக் கொண்டு உள்ளது. சரி அவ்வளவு தான் அதற்கு மேல் மண்ணை கொட்டி விட்டால் சரியாகி விடும் என்று வெறும் மண்ணை கொட்டி சமன் செய்து மூடியுள்ளனர். 

பிறகு அந்த இடத்தில் சோளம் பயிரிட்டு விவசாயமும் பார்த்து வந்துள்ளனர். சமீபத்தில் பயிரிடப்பட்ட சோளம் இடுப்பளவு உயரத்திற்கு வளர்ந்து காடாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே தண்ணீர் தேங்கி நின்று சிறிது சிறிதாக அந்த கிணற்றுக்குள் போகிறது. இதனால், மண் அரிப்பெடுத்து அந்த ஆறடியில் சிக்கிய பெரிய கல் ஒன்று நழுவி கீழ் நோக்கி சென்றுவிட்டது. இதனால், அதன் மீது கொட்டப்பட்ட மண்ணும் அந்த குழிக்குள் கரைந்து சென்று விட்டது.

பொருச்சாளி பொந்து போல இருந்த அந்த குழியின் விட்டம் நாட்கள் செல்ல செல்ல மழை அதிகமாகி அந்த குழியின் விட்டமும் அதிகரித்திருக்கிறது . இது சுஜித்தின் குடும்பத்தாருக்கு தெரியவில்லை. 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4லிருந்து 5 மணிக்குள் இரண்டரை வயது குழந்தை சுஜித் மற்றும் 5 வயது அவனின் அண்ணனும் எப்போதும் போல அந்த இடத்தில் விளையாடி இருக்கிறார்கள். 

ஒரு கட்டத்தில் அண்ணன் பெரியப்பா வீட்டிற்கு செல்ல சுஜித் அங்கேயே விளையாடி இருக்கிறான். அப்போது தவறி அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து இருக்கிறான். இது தெரியாத அவனின் குடும்பத்தார் சுஜித் காணவில்லை என எல்லா இடமும் தேடியுள்ளனர். 

அந்த ஆழ்துளை கிணறு மறுபடியும் திறந்து கொண்டதை பற்றி அறியாததால் அந்த இடத்தில் மட்டும் தேடவில்லை. இருந்தும் சுஜித் இன் அம்மா வீட்டை சுற்றி சுஜித்தே... சுஜித்தே என கூப்பாடு போட்டு கதறி உள்ளார். 

அம்மாவின் சத்தத்தை அறிந்து கொண்ட சுஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து மிகவும் பயங்கர சத்தத்தோடு அம்மா காப்பாத்துங்க மா அம்மா காப்பாத்துங்க மா என கதறுகிறான். மகனின் கதறலை கேட்ட தாய் பதறியடித்து வந்து அங்கு ஏற்பட்டிருந்த குழியை எட்டிப்பார்த்துள்ளார். 

அதில் 25 முதல் 30 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சுஜித்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவருடைய அழுகுரல் அக்கம் பக்கத்தினரை பதற்றத்துடன் அந்த இடம் நோக்கி ஓடி வர வைக்கிறது. 

இந்த செய்தி சில நிமிடங்களில் ஊர் முழுதும் பரவ காவல்துறை தீயணைப்புத்துறை போன்றவற்றிற்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் மூலம் தீயணைப்பு துறையினர் சில நிமிடங்களில் வந்து சேர்கிறார்கள். பிறகு குழந்தையை மீட்க நடந்த முயற்சிகள் அனைத்தையும் நாம் அறிவோம். 

இது குறித்து சுஜித்தின் தாய் கூறியபோது, அங்கேயே மூடப்படாமல் குழியை வைத்திருந்தால் எங்கள் குழந்தைகளை நாங்கள் அங்கு விளையாட விட்டிருப்போமா..? அந்த பள்ளம் ஏற்பட்டதே எங்களுக்கு தெரியாது. 

இந்த சம்பவம் இயற்கையின் நியதியால் தற்செயலாக நடந்த துயர சம்பவம். குழந்தையை மீட்டு கொடுக்க காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தன்னார்வலர்கள் என பலரும் அவர்களால் முடிந்த வரை போராடினர். 

ஆனால், அந்த பிஞ்சு குழந்தையை நம்மால் காப்பாற்ற முடியாமல் போனது துரதிர்ஷம். இந்த நேரத்தில், அந்த குழந்தையின் பெற்றோர்க்கு ஆறுதல் சொல்வது நம் எல்லோருடைய கடமை.அதே போல, சிலர் அரசிற்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், நாட்டிற்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் பதிவுகளை பகிர்கிறார்கள். இதனை தாண்டி, இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கவும் சிலர் துடித்துக்கொண்டிருகிறார்கள். 

அரசியல் செய்யும் விஷயம் இதுவல்ல. ஆழ்துளை கிணறுகள் குறித்த சரியான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து இயங்கிகொண்டிருக்கும் போர்வெல் போடும் நிறுவனங்களையும் , ஒரு காலத்தில் இயங்கி இப்போது மூடப்பட்ட போர்வெல் நிறுவனங்களையும் போர்கால கதியில் அவசரமாக அழைத்து இதுவரை தமிழகத்தின் எங்கெங்கு போர்வெல்கள் போடப்பட்டுள்ளன என்ற நீண்ட பட்டியலை மாவட்டம் வாரியாக பெற்று அந்த கிணறுகளின் தற்போதைய நிலை என்ன.? பயனற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் சரியாக மூடப்பட்டுள்ளதா..? என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு மக்களாகிய நாமும் முன் வந்து உதவ வேண்டும். எதிர்காலத்தில், இன்னொரு சுஜித்-தை பார்க்கும் தெம்பும், தைரியமும் நம்மிடம் இல்லை. அதனால், யாரையும் குறை கூறுவதை விட்டு விட்டு இதுபோன்ற விஷயங்கள் இனியும் நடக்காமல் இருக்க நம்மால் முடிந்ததை செய்வோம்.