விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 19-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே அதாவது அக்டோபர் 25-ம் தேதி அன்று படம் வெளியாக இருப்பதாக ஒரு கருத்து நிலவியது.
தீபாவளி அக்டோபர் 27-ம் தேதி அதாவது ஞாயிறன்று வருவதால் வெள்ளி, சனி ஆகிய இரண்டு விடுமுறை தினங்களின் வசூலை குறி வைத்து அக்டோபர் 25-ம் தேதியே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்.
படத்தின் தணிக்கை முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிப்போம். எங்களை நம்புங்கள் சரியான நாளில் படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனை படைக்கும். என்று தெரிவித்துள்ளார்.