கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் "பிகில்" படத்தின் சிறப்பு காட்சியை காண டிக்கெட் எடுத்திருந்த ரசிகர்கள். நள்ளிரவு முதலே திரையரங்கின் முன்பு திரண்டு கொண்டாட தொடங்கினர்.
மேலும், குடிபோதையில் இருந்த சில ரசிகர்கள் வானவேடிக்கை ரக பட்டாசுகளை வெறும் தலையில் சுமந்தபடி வானில் வெடிக்க செய்து நடனம் ஆடினர். இதனால், அவர்களுக்கு கையில் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும், நள்ளிரவு ஒரு மணிக்கு சிறப்பு காட்சி என்று ரசிகர் மன்றத்தால் அறிவித்து டிக்கெட்டுகள் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணி வரை சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
இதனால் கடுமையான ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் சாலையில் இருந்த பொது சொத்துக்களான பேரிகார்டுகள், மின் விளக்குகளை அடித்து உடைத்தும், சாலையில் தூக்கி வீசியும் ரகளையில் ஈடுபட்டது மட்டுமில்லாமல், தனியார் சொத்துக்களான சாலையோர கடைகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், கடையின் கதவுகள் போன்றவற்றில் கற்களை வீசி நாட்டின் நலனுக்காக போராடிக்கொண்டிருந்தனர்.
இன்னும் சில ரசிகர்கள் ஒருபடி மேலே போய் பானை வியாபாரியின் கடையில் இருந்த மண் பானைகளை எடுத்து சாலையில் தூக்கி வீசி தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.
நேரம் செல்ல செல்ல அவர்களின் அட்டகாசம் மதம் பிடித்த யானை போல அதிகரித்துக் கொண்டே இருந்தது, அந்த பகுதியே கலவர பூமியானது. விவரம் அறிந்த காவல் துறையினர் உடனடியாக கூடுதல் போலீசார் அங்கே அனுப்பி லேசான தடியடி நடத்தி ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.
பின்னர் அதிகாலை 5 மணிக்கு பிகில் திரைப்படம் திரையிடப்பட்டது. கலவரத்தை வீடியோ எடுத்தவர்களிடம் இருந்த வீடியோ காட்சிகளின் உதவி கொண்டு நாட்டு நலனுக்காக போராடிய தியாகிகளை அடையாளம் கண்ட காவல் துறையினர் திரையரங்கிற்குள் அவர்களை கண்காணித்து வந்தனர்.
மது போதையில் தங்கள் வழிகாட்டியான அந்த நடிகரை கொண்டாடிக்கொண்டிருந்த அவர்களுக்கு தெரியாது. படம் முடிந்ததும் தேச நலனுக்காக போராடிய நமக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்படவுள்ளது என்று.
3 மணி நேரம் படம் முடிந்து வெளியே வந்தவர்களில் ரகளையில் ஈடுபட்டவர்களை மட்டும் ராஜ மரியாதையுடன் பிடித்துச்சென்றனர் காவல்துறையினர்.
தேச நலனில் அக்கறை கொண்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தத விஜய் ரசிகர்கள் 30 பேர் மீது, ஜாமீனில் வெளிவர இயலாத பிரிவுகளின் கீழ் வழக்கை தீபாவளி பரிசாக கொடுத்தனர் போலீசார்,
அதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவர்களை சிறைக்குள் அடைத்து தீபாவளி வாழத்துக்களை கூறிக்கொண்டனர். "பிகில்" தீபாவளி என்று சாலையில் கலவர கூச்சலிட்டவர்களுக்கு இந்த தீபாவளி திகில் தீபாவளியாக மாறிவிட்டது என்பது தான் ஒரு தூயரமான செய்தி.