அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்திற்கு இதுவரை அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை.
மிக அதிக விலைக்கு திரையரங்கு உரிமைகள் விற்கப்பட்டிருக்கும் நிலையில், பிகில் திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு லாபத்தை அளிக்குமா? என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு தீபாவளித் திருநாள் பண்டிகை 27ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) கொண்டாடப்படுகிறது. இது ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால் அன்று வெளியாக வேண்டிய திரைப்படங்கள் அக்டோபர் 25ம் தேதி வெள்ளிக்கிழமையே வெளியாகின்றன.
தொடக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மட்டுமே இந்தத் தீபாவளிக்கு வெளியாகுமென நம்பப்பட்டது. ஆனால், கார்த்தி நடித்த 'கைதி' படமும் தீபாவளிக்கே வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரு திரைப்படங்கள் தவிர, இந்தித் திரைப்படமான 'Housefull 4' படமும் தீபாவளிக்கு வெளியாகிறது..
இந்நிலையில், பிகில் படம் உட்பட தீபாவளிக்கு வெளியாகும் அனைத்து படங்களுக்கும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என அரசு தரப்பில் கூறப்பட்டது. மீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரிடம் இந்த விவகாரம் குறித்து கேட்ட போது பிகிலாக இருந்தாலும், திகிலாக இருந்தாலும் எல்லோருக்கும் சட்டம் ஒன்று தான். என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.