கவிஞர் வைரமுத்துவிற்கு சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார்.
ஆனால், வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் அளிக்க எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பட்டமளிப்பு விழாவை ராஜ்நாத் சிங் தவிர்த்துவிட்டார். விழாவை தவிர்த்ததற்கான காரணம் தெரியவில்லை.
ஆனால், ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய வைரமுத்துவின் பேச்சு பற்றி, ராஜ்நாத்திற்கு, தமிழக பா.ஜ.க தொண்டர்கள் தங்களின் கருத்துகளை கடிதம் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் மீடூ புகாரில் சிக்கிய வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் பாடகி சின்மயி உட்பட பெண்கள் அமைப்பினர்.
இந்த தகவலும் ராஜ்நாத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இத்தகைய காரணங்களாலேயே பட்டமளிப்பு விழாவை ராஜ்நாத் சிங் தவிர்த்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வைரமுத்துவுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட இருந்த நிகழ்விலிருந்து இராணுவ அமைச்சர் விலகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும், சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகவும் வைரமுத்துவை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



