தமிழ் திரை உலகம் எத்தனையோ பின்னணி பாடகர்களை கண்டுள்ளது. ஆனால் எஸ்பி பாலசுப்பிரமணியம் மட்டும் அதில் தனித்து தெரிகிறார். அவரது இந்த தனித்துவம்தான் இத்தனை ஆயிரம் பாடல்களை பாட வைத்து மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடிக்க வைத்தது.
கர்நாடக இசையை முறைப்படி கற்றுக்கொண்டு அவர் திரையுலகம் வந்தவர் இல்லை. ஆனால் சங்கராபரணம் திரைப்படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலை சிறப்பாக பாடி தேசிய விருது பெற்றவர் என்றால் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் எத்தகையது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம், கோவிட் -19 தொற்றுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய பிறகு, செப்டம்பர் 25ம் தேதி காலமானார். அற்புதமான பாடகர் எஸ்.பி.பி-யின் ரசிகர்கள் அவரது அற்புதமான இசைத்தொகுப்புகள் மற்றும் இந்திய இசையில் அவருடைய பங்களிப்புகளை நன்கு அறிவார்கள்.
தற்போது மறைந்த எஸ்.பி.பியின் புகைப்படம் ஒன்றினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அந்த புகைப்படத்திற்கு பின்னால் மிகவும் சுவாரஷ்யமான ரகசியம் ஒன்று மறைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் , மேடைகளில் மட்டுமே கவனம் ஈர்த்து வந்த எஸ்.பி.பி.க்கு சினிமா ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை.
இன்னிசைக் குழுக்களில் முதன்மைப் பாடகராக வலம் வந்து கொண்டு இருந்த நேரத்தில், சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாடகி ஜானகியுடன் நடந்த சந்திப்பு ஒன்றுதான் எஸ்.பி.பி.யின் பார்வையை சினிமாவின் பக்கம் திரும்ப வைத்தது.
"உங்களை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்... இப்படி குழுக்களில் மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் எப்படி... சினிமாவில் நீங்கள் ஏன் பாடக் கூடாது? யாருடைய சாயலிலும் உங்கள் குரல் இல்லாதது நல்ல விஷயம்...'' எதேச்சையாக நடந்த அச்சந்திப்பில் ஜானகியின் இந்த வார்த்தைகள்தான் எஸ்.பி.பி.யின் சினிமா பயணத்துக்கான முதல் தளம்.
மேடைப் பாடகராக இருந்த நீங்கள், சினிமாவுக்குள் வந்தது எப்படி? என கேட்கும் போதெல்லாம் இந்த சம்பவத்தை மறக்காமல் சொல்லுவார் எஸ்.பி.பி. இந்நிலையில்,அவரது இள வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.







