பிரபல செய்தி வாசிப்பாளரும், சினிமா நடிகையுமான உமா பத்மநாபன், மீடியா துறைக்குள் நுழைந்த சுவாரசியமான கதையை நடிகர் மனோபாலா நடத்திய 'வேஸ்ட் பேப்பர்' யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த பேட்டியில், தனது ஆரம்ப கால அனுபவங்களையும், முதல் வாய்ப்பு அமைந்த விதத்தையும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
உமா பத்மநாபன் மீடியா துறைக்குள் நுழைந்தது குறித்து பேசுகையில், "எங்கள் குடும்பத்தில் யாருமே மீடியா துறையை சேர்ந்தவர்கள் கிடையாது. நான் தான் முதல் ஆள். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது பாடல்கள் பாடுவது, இதுபோன்ற விஷயங்கள்தான் எனக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது.
எங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியில் வரவேற்புரை, வாழ்த்துரை படிப்பதற்கு பெண்கள் யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார்கள்.
பெண்கள் யாராவது பேசுகிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். அப்போது நான் உட்பட பெண்கள் எல்லோருமே கூச்சப்பட்டோம். அதன் பிறகு பேசி தான் பார்ப்போமே என்று பேசினேன். அப்படி பேச ஆரம்பித்தபோது நான் நன்றாக பேசுகிறேன் என்றும், மிகவும் அருமையாக இருக்கிறது என்றும் அங்கு இருந்தவர்கள் எனக்கு கூறினார்கள்.
அதன் பிறகு நிறைய பேர் கூடி இருக்கக்கூடிய இடங்களில் சரளமாக பேசுவதற்கு என்னால் முடிகிறது என்பது எனக்கு புரிந்தது," என்று தனது பேச்சின் ஆரம்பத்தை நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து தனது சன் டிவி வாய்ப்பு குறித்து பேசிய அவர், "1994 ஆம் ஆண்டு சன் டிவி ஆரம்பித்து இருந்த நேரம். அப்போது செய்தித்தாளில் ஒரு ஓரத்தில் குட்டியான ஒரு விளம்பரம். என்னுடைய குடும்பத்தினர் அதை பார்த்து என்னை அந்த தொகுப்பாளினி வேலைக்கு செல்லுமாறு கூறினார்கள்.
எனக்கு சுத்தமாக விருப்பமே இல்லை. அவர்களாகவே விண்ணப்பத்தை எழுதி அனுப்பி விட்டார்கள். அதன் பிறகு நேர்காணலுக்கு என்னை அழைத்தார்கள். நேர்காணலுக்கு சென்றிருந்தேன். அங்கு நேர்காணதெல்லாம் முடிந்து ஆடிஷன் செய்தார்கள்.
அந்த ஆடிஷனில் சன் டிவியில் எத்தனை மணிக்கு என்ன நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதை பேச வேண்டும். அவ்வளவுதான். அங்கே நிறைய பேர் பேசினார்கள், நானும் பேசினேன்," என்றார்.
முதல் ஆடிஷன் அனுபவம் எதிர்பாராத திருப்பமாக அமைந்ததை விவரித்த உமா பத்மநாபன், "பேசிவிட்டு நான்கு நாள் கழித்து நான் முதல் ஆடிஷனல் பேசிய அந்த வீடியோவையே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து விட்டார்கள்!
என்னுடைய முதல் ஆடிஷனில் நான் பேசியது தான் என்னுடைய முதல் டெலிகாஸ்ட் ஆகும் அமைந்துவிட்டது. இத்தனைக்கும் ஆடிசன் தானே என்று மேக்கப் கூட போடாமல், வெறுமனே பொட்டு, கண் மை மட்டும் வைத்துக்கொண்டு சாதாரண உடை அணிந்து கொண்டு சென்று பேசினேன்," என்று ஆச்சரியத்துடன் கூறினார்.
தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலே தனது வாழ்க்கையை மாற்றியமைத்தது என்பதை உணர்ந்து நெகிழ்ச்சியுடன் பேசிய அவர், "என்னுடைய வீட்டில் இருப்பவர்கள் தான் பயங்கரமாக டார்ச்சர் செய்து வற்புறுத்தி இதற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அது தற்போது என்னுடைய வாழ்க்கையின் அடையாளமாக மாறிவிட்டது," என்று நன்றியுடன் தெரிவித்தார்.
உமா பத்மநாபனின் இந்த பேட்டி, தற்செயலாக கிடைக்கும் வாய்ப்புகள் கூட வாழ்க்கையை புரட்டிப் போடலாம் என்பதையும், குடும்பத்தினரின் சரியான வழிகாட்டுதல் ஒருவரின் வாழ்க்கையை எப்படி செதுக்க முடியும் என்பதையும் உணர்த்துகிறது.
மேக்கப் கூட போடாமல், சாதாரண உடையில் சென்ற முதல் ஆடிஷனே அவரது அடையாளமாக மாறியது ஒரு திரைப்படக் கதை போல சுவாரசியமானது.
அந்த முழு பேட்டியை பார்க்க விரும்பினால் Audition-ல எடுத்த Video Direct telecast பண்ணிட்டாங்க | Interview with Uma Part 1 | #manobala இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.