சந்தீப் கிஷன், ரித்து வர்மா நடிப்பில் த்ரிநதா ராவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள தெலுங்கு திரைப்படம் "மஸகா". இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? திரை விமர்சனத்தை காணலாம்.
படத்தின் கதை சுருக்கம்:
குடிபோதையில் கடற்கரையில் தள்ளாடும் அப்பா - மகன் ராவ் ரமேஷ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் படம் தொடங்குகிறது. அவர்கள் கடலில் இருந்து கரை ஒதுங்கியது போல் கிடக்கிறார்கள், அவர்களை இறந்துவிட்டதாக நினைத்து ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்.
சம்பவ இடத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் அஜய், போதையில் தள்ளாடும் சந்தீப் கிஷனையும், ராவ் ரமேஷையும் விசாரிக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் தங்கள் கடந்த காலத்தை பிளாஷ்பேக்காக சொல்ல படம் துவங்குகிறது.
சந்தீப் கிஷன் பிறக்கும் போதே தாயை இழந்து, தந்தையின் பாசமும் கிடைக்காமல் வளர்கிறார். அப்பா ராவ் ரமேஷ் மற்றும் மகன் சந்தீப் இருவரும் பேச்சுலர்கள் போல ஜாலியாக வாழ்க்கையை கழிக்கின்றனர்.
மகன் சந்தீப்புக்கு பெண் பார்க்க ஆரம்பிக்கிறார் ராவ் ரமேஷ். ஆனால், பெண் பார்க்கும் இடமெல்லாம் "பெண் இல்லாத வீட்டில் எப்படி பெண் கொடுப்பது?" என்று கேட்கிறார்கள்.
இதனால் ராவ் ரமேஷ் முதலில் திருமணம் செய்துகொண்டு பிறகு மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார். தனது சிறுவயது காதலி யசோதாவை சந்திக்கிறார்.
யசோதாவை காதலிக்க தொடங்கும் அதே நேரத்தில், சந்தீப் கிஷன் ரித்து வர்மாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பா, மகனின் காதல் வெற்றிபெற, யசோதா ரித்து வர்மாவின் அத்தை என்பது தெரிய வருகிறது.
மேலும் சந்தீப் மற்றும் ராவ் ரமேஷால் தனது கனவு கான்ட்ராக்ட் மிஸ் ஆன கோபத்தில் இருக்கும் முரளி ஷர்மா, இவர்கள் இருவரும் தனது வீட்டுக்கே மருமகன்களாக வரப்போகிறார்களா என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
அதன் பின்னர் சந்தீப், ரித்து வர்மா ஒன்று சேர்ந்தார்களா? அவரது அப்பாவின் காதல் என்ன ஆனது? என்பதே கலாட்டாவான மீதிக்கதை.
நடிகர்களின் பங்களிப்பு:
கிருஷ்ணா கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷனும், வெங்கட ரமணாவாக ராவ் ரமேஷும் காமெடி நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். படத்தில் ஹீரோ சந்தீப் கிஷனாக இருந்தாலும், ராவ் ரமேஷ் தனது தோள்களில் முழு படத்தையும் சுமந்து செல்கிறார்.
அந்த அளவிற்கு அவர் காமெடியில் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக யசோதாவாக வரும் அன்ஷு அம்பானியை இம்ப்ரெஸ் செய்ய 'இங்கிலீஸ்காரன்' சத்யராஜ் போல் யூத்தாக ட்ரெஸ்ஸிங் செய்துகொண்டு, காதல் வசனங்கள் பேசும் காட்சிகள் அல்டிமேட் காமெடி.
அதே நேரத்தில், தான் தான் உன் சிறுவயது காதலன் என்று உண்மையை கூறும் காட்சியில் எமோஷனல் நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். முரளி ஷர்மா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
இன்டர்வியூவுக்கு வந்த நபர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததால் அவரை பழிவாங்க ரிட்டையர்மென்ட் வரை காத்திருந்து கால்களை உடைக்க ஆள் செட் பண்ணும் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது.
அதிலும் அவர் மிஸ்ஸாக தானே ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பலை அடங்க நேரமாகிறது. வழக்கமான ஹீரோவாக வரும் சந்தீப் கிஷன் ரொமான்ஸ், சண்டை, பாடல் காட்சிகளில் ரசிகர்களை கவர்கிறார். ரித்து வர்மாவுக்கு நடிக்க பெரிய வேலை இல்லை.
இயக்கம் மற்றும் தொழில்நுட்பம்:
"தமாக்கா" போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த த்ரிநதா ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். முதல் பாதி காமெடி சரவெடியாகவும், இரண்டாம் பாதி சென்டிமென்ட் கலந்தும் திரைக்கதை அமைத்துள்ளார்.
மொத்தத்தில் படம் ஜாலியான ஃபேமிலி என்டர்டெய்னராக ஒர்க் ஆகியிருக்கிறது. ஆனால் லாஜிக் பார்க்காமல் ஜாலியாக ரசிக்கலாம். லியோன் ஜேம்ஸின் இசை ஓகே ரகம். நிஸார் ஷாபியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில்:
"மஸகா" திரைப்படம் ஒரு ஜாலியான காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். லாஜிக் பார்க்காமல் காமெடி மற்றும் நடிகர்களின் நடிப்பை ரசிக்க விரும்புபவர்களுக்கு இப்படம் பிடிக்கும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

