மிசாவை பார்த்தவர் ஸ்டாலின்.. அண்ணாமலை இதுக்கே அலறுகிறார்.. அமைச்சர் சேகர் பாபு கடும் பதிலடி..!


டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நேற்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். 

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரும், வீட்டில் இருந்து வெளியே வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டனர். 

தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல பாஜக முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் இதேபோல் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்படாததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அண்ணாமலை காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தார். 

ஏன் தங்களை விடுவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், கொல்கத்தா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதால் டென்ஷன் அடைந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவின. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். 

அப்போது செய்தியாளர்கள், "5,000 டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளது" குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: "உத்தர பிரதேசத்தில் மோடியின் சர்க்கார், பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. 

அங்கு போய் ஆணி அடித்து முதலில் படத்தை மாட்டட்டும். நாங்கள் வேண்டுமானால் ஆணி சப்ளை செய்கிறோம். அதன்பிறகு இங்கு வரட்டும். இன்னும் கடுமையாக பேசுவேன். ஏங்க அசிங்கமாக இல்லையாங்க. ஒரு கட்சியின் தலைவன் போராடுகிறான். 

ஒரு 5 மணிநேரம் மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர். 5 மணி ஆகிவிட்டது. ஊருக்கு செல்ல விமானத்தை தவறவிட்டுவிட்டேன். 3 விமானங்கள் தவறிவிட்டது. மாலை 6 மணி ஆகிவிட்டது என்னை வெளியே விடுங்கள் என்று காவல்துறையிடம் சண்டையிடுகிறாயே, நாட்டுக்கு போராடுவதாக கூறுகிறாயே, ஒரு 5 மணிநேரம் கூட போலீஸ் காவலில் இருக்க முடியாத நீ.. நாட்டுக்காக எப்படி உழைப்பாய். 

எங்கள் முதல்வர் திருமணமான ஓராண்டு காலத்தில் தன்னுடைய இளமை பருவத்தில் மிசா எனும் கொடுமையை சிறைச்சாலையில் கழித்தவர். அவரை எதிர்த்து நின்றால் அவரது கால் தூசுக்கு கூட உன் போராட்டம் எடுபடாது. அமைச்சராக இருந்து அல்ல. 

அண்ணா சொன்னது போல் அமைச்சர் என்பது தோளில் போட்ட துண்டு. கொள்கை என்பது தான் இடுப்பில் கட்டிய வேஷ்டி. ஆகவே துண்டு பெரியதா? வேஷ்டி பெரியதா? என்று வருகின்றபோது வேஷ்டி தான் பெரியது என்று ஆட்சி அதிகாரம் என்ற துண்டை உதறிவிட்டு களத்திலேயே ஒரு அண்ணாமலை அல்ல 100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்" என்று காட்டமாக விமர்சனம் செய்தார். 

அமைச்சர் சேகர்பாபுவின் இந்த காட்டமான கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் போராட்டத்திற்கு பதிலடியாகவும், அண்ணாமலையின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அவர் பேசியுள்ள இந்த வார்த்தைகள் இரு கட்சிகளுக்கிடையேயான மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post