மக்கள்தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாட்டை முறையாக பின்பற்றியதன் காரணமாக இந்த மாநிலங்களுக்கு லோக்சபா தொகுதிகள் குறையும் வாய்ப்பு உள்ளது.
மாறாக, வட மாநிலங்களில் மக்கள்தொகை கட்டுப்பாடு முறையாக பின்பற்றப்படாத நிலையில், அங்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனால், மக்கள்தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்யக் கூடாது என்று பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக அல்லாத பிற கட்சி தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். மக்கள் தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதி மறுவரை செய்ய எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், அதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அந்தந்த தலைவர்களிடம் நேரில் வழங்கினர்.
இதுதொடர்பாக திமுக எம்எல்ஏவும், திமுக மருத்துவ அணியின் செயலாளருமான ஏழிலன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மக்கள்தொகை அடிப்படையில் லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஆலோசனைக்கு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த கடிதங்கள் அந்தந்த தலைவர்களுக்கு நேரில் வழங்கப்பட்டது.
இதையடுத்து தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆர்எஸ்பி, கேரளா காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தெலுங்கானாவை எடுத்து கொண்டால் அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசாவில் செயல்படும் பிஜூ ஜனதாதளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக் உள்பட பலர் வருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து கூட்டத்துக்கு 7 மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் பாஜகவினர் சரியான பதில் என்பதை அளிக்கவில்லை.
திமுக எப்போதும் மாநில உரிமை, சமூக நீதி, இருமொழி கொள்கை ஆகியவற்றுக்கு குரல் கொடுத்து வருகிறது. இந்த குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ஐடிசி சோழா ஹோட்டலில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் மாநிலங்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.