குடி பழக்கம், சப்ப மூக்கி, பிராமணர் - நெகட்டிவ் கமெண்ட்டுகளுக்கு நீலிமா ராணி கூல் பதிலடி..!

2000-களில் சின்னத்திரையில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைத்து ஆட்சி செய்தவர் நடிகை நீலிமா ராணி. 

குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களிலும், ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 

தற்போது, நடிகை நீலிமா ராணி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறார். 

சமீபத்தில், நீலிமா ராணி தனது யூடியூப் சேனலில், ரசிகர்களின் பல்வேறு விதமான கமெண்ட்களுக்கு பதிலளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் கையாண்ட கமெண்டுகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

"என்னைக் கேள்வி கேட்ட உங்க எல்லோருக்கும் இன்று நான் கேள்வி கேட்கப் போகிறேன்" என்று கூறி வீடியோவை தொடங்கிய நீலிமா ராணி, தனக்கு வந்த சில சுவாரஸ்யமான மற்றும் சற்று நெகட்டிவ் கமெண்ட்களையும் எடுத்து பதிலளித்து அசத்தினார். 

டிவி இல்லாத வீடா? - நீலிமாவின் நச் பதில்! 

அவருக்கு வந்த முதல் கமெண்ட், "நம்மள மட்டும் டிவி பார்க்க வைக்குறாங்க. ஆனால், நீலிமா வீட்டுல டிவி இல்லை. என்ன அநியாயம் இது?" என்பது தான். இதற்கு பதிலளித்த நீலிமா ராணி, "சிலர் பொழுதுபோக்குக்காக டிவி பார்ப்பார்கள். 

சிலர் உபயோகமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் பார்ப்பார்கள். நான் என்னுடைய நேரத்தை புத்தகம் படிப்பதில் செலவிடுகிறேன். என்னுடைய வீட்டில் 12 பேர் இருக்கிறோம். 

அனைவரையும் ஒரு டிவி முன்பு கட்டிப் போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் டிவி இல்லை" என்று தெளிவான பதிலளித்தார்.  

மரியாதை முக்கியம்! - காட்டமான பதில்! 

அடுத்ததாக, "என்னடி பண்ணுற இங்க உட்கார்ந்துகிட்டு?" என்று ஒருவர் மரியாதை குறைவாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "என்னை 'டி' போட்டு பேசுற அளவுக்கு உங்களை எனக்குத் தெரியாது. மரியாதை கொடுப்பது நம் தமிழர் பண்பாடுகளில் ஒன்று. 

அதனால் அதனைப் பின்பற்றுவது சிறந்தது. உங்கள் வீட்டிலும் இதுபோன்று யாரையும் கூப்பிடாதீர்கள். அன்போடு இப்படி சொல்வது வேறு. உங்களை என்னால் தொடர்புகொள்ள முடியாது என்கிற தைரியத்தில் இப்படியெல்லாம் செய்யலாமா?" என்று காட்டமாக பதிலளித்தார். 

 சப்ப மூக்கா? கூலான ரெஸ்பான்ஸ்! 

"சப்ப மூக்கி" என்று யாரோ ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதனை படித்த நீலிமா, "நான் சப்ப மூக்கிதான். என்ன பண்ணுறது? என் பொறப்பு இப்படி ஆகிடுச்சு. 

ஆனால், இந்த சப்ப மூக்கை வைத்துக்கொண்டே நான் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கேன். அதற்காக என்னுடைய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய நன்றி" என்று மிகவும் கூலாக பதிலளித்து அசத்தினார்.  

குடிப்பழக்கம் பற்றி கேட்ட ரசிகர்! 

"நீங்க குடிப்பீங்களா?" என்ற கமென்ட்டிற்கு பதிலளித்த நீலிமா, "கண்டிப்பா. நிறைய தண்ணீர், ஜூஸ் குடிப்பேன். மேலும், குடிப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி பொதுவெளியில் கேட்கக்கூடாது. 

சோஷியல் ட்ரிங்க் வேறு. ஆனால், குடி நிச்சயம் குடும்பத்தைக் கெடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது" என்று அறிவுரை வழங்கி பதிலளித்தார்.  

மதம் குறித்த கேள்விக்கு தெளிவான விளக்கம்! 

"நீங்கள் பிராமனாரா?" என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "நான் மதவாதி அல்ல. ஆன்மீகவாதி மட்டுமே. என்னுடைய அப்பா அம்மா பிராமணர்கள். ஆனால், நான் ரமலான் நோன்பு முதல் கிறிஸ்மஸ்க்கு சர்ச் வரை எல்லா வழிபாடுகளையும் பின்பற்றுவேன். 

என் பெற்றோர்கள் உட்பட நாங்கள் யாரும் ஜாதி, மதம் சார்ந்த விஷயங்களை ஆதரித்ததில்லை" என்று தெளிவான விளக்கம் அளித்தார் நீலிமா ராணி. நீலிமா ராணி, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 பலரும் நீலிமா ராணியின் பக்குவமான பதிலையும், கூலான அணுகுமுறையையும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.