தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
மகளிர் தின வாழ்த்தும் அரசியல் விமர்சனமும்:
நடிகர் விஜய் மகளிர் தினமான இன்று, பெண்களை வாழ்த்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், "தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். சந்தோஷம் தானே?" என்று பெண்களை வாழ்த்துகிறார்.
தொடர்ந்து, "என்னத்த பாதுகாப்பா இருந்தா தானே சந்தோஷத்தை உணர முடியும்? பாதுகாப்பே இல்லாத போது எந்த சந்தோஷத்தை உணர முடியும் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நீங்களும் நானும் எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்வு செய்தோம். ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது.
விடுங்க.. எல்லாமே மாறுவது தானே.. மாற்றத்திற்கு உரியது தானே.. வரும் 2026 தேர்தலில் நீங்க எல்லாம் சேர்ந்து.. இல்ல.. நாம எல்லாம் சேர்ந்து இந்த திமுக அரசை நாம் மாற்றி காட்டுவோம்.. ஒன்னு மட்டும் சொல்றேன்.. எந்த சூழ்நிலையிலும் உங்களுடைய மகனா, அண்ணனா, தம்பியா, தோழனா உங்க கூட நான் நிப்பேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
பரபரப்பை கிளப்பிய வீடியோ:
விஜய் வெறுமனே மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிக்காமல், அரசியல் விமர்சனத்தையும் முன்வைத்து பேசிய இந்த வீடியோ, வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியது.
அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து திமுகவை தனது அரசியல் எதிரியாக காட்டி வரும் விஜய், தற்போது நேரடியாகவே திமுக அரசை தாக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து: விஜய்யின் இந்த வீடியோ அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்யின் இந்த பேச்சுக்கு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ எதிர்வினையும் வரவில்லை என்றாலும், விஜய்யின் இந்த கருத்துக்கள் அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
2026 தேர்தலை நோக்கிய நகர்வு:
2026 தேர்தலில் திமுக அரசை மாற்றுவோம் என விஜய் வெளிப்படையாக அறைகூவல் விடுத்திருப்பது, அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
திமுகவை நேரடியாகவும் கடுமையாகவும் விமர்சனம் செய்து விஜய் பேசியிருப்பது, அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது என்பதையே உணர்த்துகிறது.
மேலும் இது, விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.