நடிகை சோனா மனதில் பட்டதை தயங்காமல் வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
"குசேலன்" திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட விதம் பலரையும் கவர்ந்துள்ளது.
சோனா "பூவெல்லாம் உன் வாசம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கிக் கொண்டார்.
ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும், தனது தனித்துவமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஒரு சில படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த சோனா, பின்னர் கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் சின்னத்திரையிலும் அவர் அறிமுகமானார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அபி டெய்லர்" தொடரில் வில்லியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "மாரி" தொடரிலும் வில்லியாக நடித்து வந்தார். இருப்பினும், சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து அவர் திடீரென விலகினார்.
தற்போது, சோனா தனது வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக எடுத்துள்ளார். அந்த தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சோனா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "நடிகர் ரஜினிகாந்த் உலகத்துக்கு தான் சூப்பர் ஸ்டார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படியெல்லாம் கிடையாது. அவருடைய மனதில் அந்த சிந்தனையுமே இல்லை.
சூட்டிங் ஸ்பாட்டில் நான் என் கண்ணாலே பார்த்தேன். அங்கு இருப்பவர்கள் எல்லோரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருப்பார். சூப்பர் ஸ்டார் என்ற கர்வமோ, திமிரோ அவரிடம் கொஞ்சமும் கிடையாது. அவரிடம் நாம் ஒரு முறை பேசிவிட்டால் அதை அப்படியே நினைவு வைத்திருப்பார்."
"குசேலன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னுடைய குடும்பத்தைப் பற்றி நான் பேசிக் கொண்டு இருந்தேன். அதற்குப் பிறகு எட்டு வருடம் கழித்து ஒருமுறை ஏர்போர்ட்டில் பார்த்தேன்.
அவர் என்னிடம் நான் குசேலன் படத்தில் எந்த இடத்தில் விட்டேனோ அதே விஷயத்தை அப்படியே தொடர்ந்து கேட்டார். 'உங்க அம்மா இப்ப எப்படி இருக்காங்க?' என்று கேட்டார்.
அம்மாவுக்கு குசேலன் திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது சர்க்கரை நோய் பாதித்திருந்ததால் கால் விரல்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு கொண்டிருந்தது. அது குறித்து கூட அவர் எட்டு வருடம் கழித்து கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது."
"அதோடு என் தங்கைகள், தம்பி குறித்து எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். நான் இந்த சம்பவத்திற்கு பிறகு இரண்டு மாதமாக எல்லாரிடமும் 'ரஜினிகாந்த் என்கிட்ட இந்த விஷயத்தையும் மறக்காமல் எட்டு வருஷம் கழிச்சு பேசினாரு' என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஆனால் அதற்கு பிறகு தான் எனக்கே தெரிய வந்தது அவர் என்னிடம் மட்டுமல்ல, அவரிடம் பேசும் எல்லாரிடமும் இப்படித்தான் இருப்பார் என்று... எந்த விஷயம் அவரிடம் பேசினாலும் அதை அவர் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்" என்று அந்த பேட்டியில் ரஜினிகாந்த் குறித்து சோனா பெருமையாக பேசியிருக்கிறார்.
இந்த வீடியோக்களை ரஜினிகாந்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்து வருகின்றனர். ரஜினியின் எளிமையான குணத்தை சோனா வெளிப்படுத்திய விதத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.