தமிழ் சினிமாவின் 90களின் முன்னணி நடிகையான கஸ்தூரி, சமீபத்திய பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் கடினமான தருணங்களைப் பகிர்ந்து, ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தார்.
ஆத்தா உன் கோயிலிலே, அமைதிப்படை, இந்தியன் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற கஸ்தூரி, தற்போது சமூக ஆர்வலராகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் செயல்படுகிறார்.
அவரது பேட்டியில், மகளின் உயிரைக் காப்பாற்றிய கணவரின் அர்ப்பணிப்பு மற்றும் தனது வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்து உருக்கமாக பேசினார். கஸ்தூரியின் மகள் ஷோபினிக்கு 7 வயதில் லுகேமியா (ரத்த புற்றுநோய்) கண்டறியப்பட்டது.
“மரணத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன்; இரண்டு முறை தோற்றேன், ஆனால் மூன்றாவது முறை தோற்கவில்லை,” என்று கஸ்தூரி கூறினார். அவரது கணவர் ரவிக்குமார், அமெரிக்காவில் மருத்துவராக இருந்து, கீமோதெரபி மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை இணைத்து, இரண்டரை ஆண்டு தொடர் சிகிச்சையால் மகளை காப்பாற்றினார்.
“கடவுளுக்கு அடுத்து என் கணவரே என் குழந்தையை காப்பாற்றினார்,” என்று அவர் நெகிழ்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், இதை சொல்வதற்கு எனக்கு கூச்சம் இல்லை, “ பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் டாக்டர், வழக்கறிஞர் ஆக வேண்டும் என ஆசைப்படுவர்.
ஆனால் எனக்கு, என் குழந்தை நோயின்றி உயிருடன் வளர்ந்தால் போதும் என்ற ஆசை மட்டுமே இருந்தது,” என்று கஸ்தூரி கண்ணீருடன் கூறினார். மகளின் நோயால் தூக்கமின்மை பாதிப்பு ஏற்பட்டாலும், மருத்துவமனையில் மற்ற குழந்தைகளின் போராட்டத்தைப் பார்த்து மனதை தேற்றிக்கொண்டார்.
இந்த பேட்டி, ஒரு தாயின் உணர்வுகளையும், குடும்ப ஒற்றுமையின் வலிமையையும் வெளிப்படுத்தி, வாழ்க்கையில் நம்பிக்கையை வலியுறுத்துகிறது.