பிரபல இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
பெண்கள் ஏன் திரைப்பட இயக்குனர்களாக அதிகம் வருவதில்லை என்ற கேள்விக்கு, சுதா கொங்கரா, “பெண்களுக்கு திருமணம், குழந்தை பெறுதல் போன்ற குடும்பப் பொறுப்புகள் முதன்மையாக இருக்கின்றன.
குறிப்பிட்ட வயதில் இந்தப் பொறுப்புகளை முடித்த பின்னரே, அவர்கள் தங்கள் தனிப்பட்ட லட்சியங்களைப் பற்றி சிந்திக்க முடியும். ஆனால், சினிமாவை முழு மனதுடன் அர்ப்பணிப்பாக எண்ணும் பெண்களுக்கு இந்தப் பொறுப்புகள் தடையாக இருக்காது.
மன உறுதியுடன் இருக்கும் பெண்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும்,” என்றார். மேலும், தனது ஆரம்ப கால அனுபவங்களைப் பகிர்ந்த அவர், “நடிகர்களிடம் கதை சொல்லும்போது, முழு கதையையும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்பார்கள்.
ஆனால், எனக்கு அது மிகவும் கடினமாக இருக்கும். கதையை எழுதி, திரைக்கதையாகக் கொடுப்பதே என் விருப்பம். இருப்பினும், பட வாய்ப்புக்காக பலமுறை கதையைச் சொல்ல வேண்டியிருந்தது. இது உடல் மற்றும் மன ரீதியாக பெரும் சவாலாக இருந்தது.
சில சமயங்களில் வாந்தி வரம், சில சமயங்களில் லூஸ் மோஷன் வரும்.. இது போன்ற உடல்நலப் பிரச்சனைகளைக்கூட எதிர்கொண்டேன். இப்படியான சவால்களைத் தாண்டி ஒரு பெண் இயக்குனராக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும்,” என்று உருக்கமாகக் கூறினார்.
‘பராசக்தி’ படத்தின் முன்னேற்றம் குறித்து கேட்கப்பட்டபோது, சுதா கொங்கரா, “படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்தவுடன் ‘பராசக்தி’ படப்பிடிப்பில் இணைவார்.
தற்போது எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட்டிங் செய்து வருகிறோம். ஜூன் மாதத்திற்குள் மீதமுள்ள காட்சிகளைப் படமாக்கி முடிப்போம். படம் தாமதமாகும் என்ற கேள்விக்கு, எங்களது திட்டப்படி எல்லாம் சீராக நடக்கிறது,” என்றார்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் ஏற்படுமா என்ற கேள்விக்கு, “அது தயாரிப்பாளரின் முடிவு. நாங்கள் எந்த மோதலையும் பதிவு செய்யவில்லை,” என்று தெளிவாகக் கூறினார்.
சுதா கொங்கராவின் இந்தப் பேட்டி, தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் சவால்களையும், ‘பராசக்தி’ படத்தின் எதிர்பார்ப்புகளையும் மேலும் உயர்த்தியுள்ளது.