தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம், தமிழ் சினிமாவையும் அரசியல் வட்டாரங்களையும் உலுக்கியுள்ளது.
இந்த ஊழல் பணத்தில் Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை (ED) கண்டறிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாகவும், அவருக்கு ED சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகாஷ் பாஸ்கரன், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, மற்றும் சிம்புவின் STR 49 ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். இவர், தனுஷுக்கு ரூ.40 கோடி, சிம்புவுக்கு ரூ.15 கோடி, மற்றும் சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி படத்திற்காக ரூ.25 கோடி ரொக்கமாக முன்பணமாக வழங்கியதற்கான ஆதாரங்களை ED கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ரொக்கப் பண பரிவர்த்தனைகள், வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி படத்திற்காக ரூ.70 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், இதில் பாதி பணமாகவும், மீதி பணத்தில் சென்னை ECR-ல் உள்ள அவரது வீட்டை இடித்துவிட்டு பிரம்மாண்டமான புதிய வீடு கட்டப்பட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், சிவகார்த்திகேயன் “இடியாப்ப சிக்கலில்” சிக்கியுள்ளதாகவும், அவரது வீடு தொடர்பான ஆவணங்களும் விசாரணை வளையத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம், தனுஷ் மற்றும் சிம்பு, ரொக்கப் பணத்தை கணக்கில் காட்டி சிக்கலில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த விவகாரம், தமிழ் சினிமாவில் நிதி முதலீடு மற்றும் அரசியல் தொடர்புகள் குறித்து பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
ஆகாஷ் பாஸ்கரனின் திடீர் உயர்வு, அவரது அரசியல் நெருக்கம், மற்றும் டாஸ்மாக் ஊழல் பணத்துடனான தொடர்பு ஆகியவை, ED-யின் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
ரசிகர்கள் மத்தியில், இந்தச் செய்தி அதிர்ச்சியையும், சினிமா-அரசியல் இடையேயான நிழல் உறவு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.