கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் ஒருவர் அளித்த புகார், கடந்த ஒரு வாரமாக இந்தியாவையே உலுக்கியுள்ளது.
1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலில் பணியாற்றிய இவர், பல உடல்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக நீதிமன்றத்திலும், காவல் நிலையத்திலும் தெரிவித்தார்.

இந்தப் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணையைத் தொடங்கியது.புகார்தாரர் அடையாளம் காட்டிய 15 இடங்களில் 13 இடங்கள் SIT-ஆல் குறிக்கப்பட்டன.
கடந்த இரு நாட்களாக முதல் ஐந்து இடங்களில் நடந்த தோண்டும் பணியில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், ஜூலை 31, 2025 காலை ஆறாவது இடத்தில் தோண்டியபோது, இரண்டு மனித எலும்பு பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனால் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எலும்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை ஆணுடையவையா, பெண்ணுடையவையா, எப்போது புதைக்கப்பட்டன என்பதை உறுதி செய்ய ஆய்வு நடைபெறுகிறது.
புகார்தாரர் இந்த இடத்தில் எட்டு உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். 8 அடி ஆழம், 12 அடி அகலத்தில் தோண்டப்பட்ட இந்தப் பகுதியை விரிவாக்க, JCB இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பொருள் சாட்சிகள் அழியாமல் இருக்க, கர்நாடக ஆன்டி-நக்சல் படையினர் 13 இடங்களையும் இரவு-பகல் பாதுகாக்கின்றனர். தற்போது உயர் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்கின்றனர்.
முதல் முறையாக எலும்புகள் கிடைத்தது, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் தோண்டும் பணி தீவிரமாகத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம், தர்மஸ்தலாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் தொடர்பான பழைய புகார்களை மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளது.
நன்றி வீடியோ தந்தி டிவி
Summary in English : In Dharmasthala, Karnataka, human bone fragments were found at a site where a complainant, a former sanitation worker, claimed hundreds of bodies were buried 14 years ago. Excavation at the sixth marked site revealed evidence, prompting forensic analysis and intensified police investigation.

