கர்நாடக மாநிலம் சாலிகிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் வாயில் டெட்டனேட்டர் வைத்து வெடிக்கச் செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைக்கு பின்னணியில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், கள்ளியாடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்.

இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது, அவரது வீட்டில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுகுறித்து சுபாஷ் அளித்த புகாரின் பேரில் இருட்டி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படாமல் கொள்ளை நடந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
விசாரணையில், சுபாஷின் குடும்ப உறுப்பினர்கள் மீது சந்தேகம் எழுந்தது. குடும்பத்தினரை தனித்தனியாக விசாரித்தபோது, சுபாஷின் மனைவி தர்ஷிதா கர்நாடகாவில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கர்நாடக காவல்துறையின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், சாலிகிராமத்தில் உள்ள தனியார் விடுதியில் தர்ஷிதா கொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
காவல்துறையினர் நேரடியாகச் சென்று பார்த்தபோது, தர்ஷிதாவின் வாயில் டெட்டனேட்டர் வைத்து வெடிக்கச் செய்யப்பட்டு, அவரது முகம் மற்றும் உடலின் பல பாகங்கள் சிதைந்த நிலையில் காணப்பட்டன.
தீவிர விசாரணையில், தர்ஷிதாவின் கள்ளக்காதலனான சித்தராஜு என்பவர் இந்தக் கொலையில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. சித்தராஜு, பெரியப்பட்டணத்தைச் சேர்ந்தவர்.
விசாரணையில், தர்ஷிதா தனது மகனை தாய் வீட்டில் விட்டுவிட்டு, சுபாஷின் வீட்டிற்குத் திரும்பி வந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாகவும், பின்னர் சித்தராஜுவுடன் சாலிகிராமத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்தது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, சித்தராஜு தர்ஷிதாவை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.காவல்துறையினர் சித்தராஜுவை கைது செய்து, விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary : In Karnataka, a Kerala woman, Darshitha, was brutally murdered in a private lodge in Saligrama by her lover, Siddaraju, who detonated an explosive in her mouth. The murder followed a theft of 30 sovereigns of gold and 4 lakh rupees from her husband Subash's home.


