மாத்திரை விழுங்கிய குழந்தை உயிரிழந்தது எப்படி? பெற்றோர்களே மிக மிக கவனம்..!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே வேலூர் கிராமத்தைச் சேர்ந்த வேலூர் சசிகலா தம்பதியினரின் நான்கரை வயது குழந்தை, மாத்திரை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 18 அன்று காலை, குழந்தைக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் குழந்தையை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்து, காய்ச்சலுக்கான மாத்திரைகளை பரிந்துரைத்தார். மாத்திரைகள் பெரியதாக இருப்பதால், அவற்றை இரண்டாக உடைத்தோ அல்லது தண்ணீரில் கரைத்தோ கொடுக்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, இரவு 8 மணியளவில், உணவு உட்கொண்ட பிறகு, பெற்றோர் மாத்திரையை இரண்டாக உடைத்து குழந்தைக்கு கொடுத்தனர். ஆனால், மாத்திரை குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால், குழந்தை துடிதுடித்ததாகத் தெரிகிறது.

பதறிப்போன பெற்றோர், உடனடியாக குழந்தையை மீண்டும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, மாத்திரை குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருப்பது உறுதியானது.

இருப்பினும், சில நிமிடங்களில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குழந்தையின் பெற்றோரை கதறி அழவைத்தது.தகவலறிந்த திருத்தணி காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து, வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாத்திரையை பெற்றோர் சரியாக உடைக்காமல், பெரிய பகுதியாகக் கொடுத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மருத்துவர் சுபாஷ் சந்திர போஸ், குழந்தைகளுக்கு மாத்திரைகள், கடினமான மிட்டாய்கள், பாதாம் போன்றவற்றை கொடுக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

"ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கடினமான பொருட்கள், சாக்லேட், நட்ஸ் போன்றவை தொண்டையில் சிக்க வாய்ப்புள்ளது. மாத்திரைகளை பொடியாக்கி, குழைத்து கொடுப்பது நல்லது.

மேலும், மாத்திரைகளை குழந்தைகளுக்கு எட்டாதவாறு பூட்டி வைக்க வேண்டும்," என்று அவர் எச்சரித்தார்.மருத்துவர் மேலும் கூறுகையில், "குழந்தையின் தொண்டையில் ஏதேனும் சிக்கினால், பதறாமல் இருக்க வேண்டும்.

இருமல் ஏற்பட்டால், குழந்தையை இரும அனுமதிக்க வேண்டும். மூச்சுக் குழாய் முழுவதுமாக அடைபட்டால், குழந்தையை சாய்த்து, முதுகில் ஐந்து முறை வேகமாகத் தட்ட வேண்டும். இது சிக்கிய பொருளை வெளியேற்ற உதவும்," என்று விளக்கினார்.

ஆங்கிலத்தில் சுருக்கம் (Summary) : A four-and-a-half-year-old child from Velur, near Tiruthani, Tiruvallur district, died after choking on a fever tablet on August 18, 2025. Despite medical advice to split or dissolve the tablet, it got stuck in the child’s throat, leading to fatal choking. Tiruthani police are investigating.