கோவையைச்சேர்ந்த இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்டு, ஒரு வாரத்தில் தலைமறைவான சிங்கப்பூர் இளைஞர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனக்கு நடந்த அநீதி மற்றொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என தைரியமாக முன்வந்து புகார் அளித்துள்ள அந்த இளம்பெண், குற்றவாளியின் லீலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, சாஸ்தாநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன்-செல்வகுமாரி தம்பதியின் மகனான குகன், சிங்கப்பூரில் எம்என்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்றபோது, அதே ஊரைச் சேர்ந்த ஜூனியர் மாணவி மீது காதல் கொண்டார். இருவரும் காதலித்த நிலையில், குடும்ப சம்மதம் இல்லாததால் அந்த பெண் குகனின் திருமணப் பிரேரணையை நிராகரித்தார்.
இதையடுத்து, சிங்கப்பூரில் வேலை கிடைத்ததால் அங்கு சென்ற குகன், மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, தற்கொலை மிரட்டல் உள்ளிட்டவற்றால் அவரை காதலுக்கும் திருமணத்திற்கும் சம்மதிக்க வைத்தார்.
கடந்த மாதம் 27ஆம் தேதி கோவைக்கு வந்த குகன், அந்த இளம்பெண்ணை சந்தித்து, அவரது தாயார் ஏற்பாடு செய்த எளிய திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு குகனின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அவசரமாக நடந்த இந்த திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். திருமணத்திற்கு பிறகு, சிங்கப்பூருக்கு மனைவியை அழைத்துச் செல்வதற்கு விசா ஏற்பாடு செய்வதாகக் கூறி, குகன் சிவகங்கைக்கு சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் தலைமறைவாகி, தொடர்பை துண்டித்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண், குகனின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஆய்வு செய்தபோது, அவர் பல பெண்களுடன் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் உரையாடியது தெரியவந்தது. மேலும், பல பெண்களிடம் “நீதான் என் மனைவி” என உரிமையாக பேசியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, குகனுடன் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் பல்வேறு சாக்குப்போக்குகளை கூறி நாட்களை இழுத்தடித்தார். இறுதியாக, அவரை நேரில் சந்திக்க சிவகங்கை சென்ற பெண்ணுக்கு, குகன் தொடர்ந்து ஏமாற்றுவதாகவே இருந்தார்.
மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், கோவை காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். குகனின் பெற்றோரோ அல்லது அவரது குடும்பத்தினரோ இதுவரை புகாரை எதிர்கொள்ள வரவில்லை. மேலும், காவல் துறையினர் குகனின் பெற்றோருக்கு ஆதரவாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
குகன் தற்போது சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், அவரை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“எனக்கு நடந்தது போல மற்றொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது. குகன் இனி எந்த பெண்ணையும் ஏமாற்றக் கூடாது,” என உருக்கமாக கூறிய அந்த பெண், தனது காதல் கணவனால் ஏமாற்றப்பட்ட வலியை பகிர்ந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Summary : A Coimbatore woman, married to Gugan from Singapore, was abandoned a week after their temple wedding. Gugan, who manipulated her with love, disappeared after promising a visa. She discovered his inappropriate chats with other women and filed a police complaint to seek justice.

