ஐட்டம், டிக்கெட்-ன்னு சொல்லி அந்த உறுப்பை பிடிச்சு.. பொள்ளாச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் பாலியல் கொடுமை.. மாணவி ஆடியோ

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கிணத்துகடவு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகள், இசை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் தாவரவியல் ஆசிரியர் பாலு உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கல்வித்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவியின் அதிர்ச்சி வாக்குமூலம்

மாணவி ஒருவர் அனுப்பிய ஆடியோவில், "எங்க மியூசிக் சார் செல்வராஜ், நடன பயிற்சியின்போது இடுப்பை பிடித்து தவறாக நடந்து கொள்கிறார். பாட்டனி சார் பாலு, ஊக்குவிப்பதாகக் கூறி முதுகைத் தடவுவதும், தொடையில் கை வைப்பதும், தட்டுவதுமாக இருக்கிறார்.

இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. 10-ம் வகுப்பு பிராக்டிகல் தேர்வில் கை வைப்பார்களோ என்ற அச்சம் உள்ளது," என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும், முந்தைய ஆண்டுகளில் இதே பள்ளியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகவும், சீனியர் மாணவிகள் எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலரின் குற்றச்சாட்டு

நேதாஜி மக்கள் இயக்கத்தின் மாநில மகளிரணி தலைவர் புவனன் நாச்சியார், இந்தப் பிரச்சனை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

"2024 ஜனவரியிலேயே இதே மியூசிக் ஆசிரியர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வதாக மாணவிகள் அழுது புலம்புகின்றனர்.

இந்தப் பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் உள்ளூர் அரசியல் ஆதரவுடன் செயல்படுவதால், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மாணவிகளை 'ஐட்டம்', 'டிக்கெட்' என்று அழைப்பதாகவும், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும்" அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்தப் பிரச்சனைக்கு நீதி கிடைக்கவில்லையெனில், குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்போம் என்று எச்சரித்துள்ளார்.

கல்வித்துறை மற்றும் காவல்துறை விசாரணை

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், இதுவரை குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நீதி குறித்து கவலை தெரிவித்துள்ள புவனன் நாச்சியார், சைல்டு ஹெல்ப்லைனில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவித்தார்.

பொதுமக்கள் கோரிக்கை

ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், இதுபோன்ற ஆசிரியர்களின் முறைகேடான செயல்கள் மொத்த பள்ளியின் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

"அதிகார பலத்திலோ, ஆசிரியர்களின் தவறான நடவடிக்கைகளிலோ, குற்றம் எப்போதும் கேடு தரும். உடனடியாக குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தப் பிரச்சனை கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில், மாணவிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், உரிய விசாரணையுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Summary : In a government school near Pollachi, Coimbatore, Class 10 girls have accused music teacher Selvaraj and botany teacher Balu of sexual harassment during dance practice. An audio statement by a student went viral, prompting investigations. Social activist Bhuvanan Nachiar alleges inaction and political interference.