கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்த இரண்டு பாம்பு கடி சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. முதல் சம்பவம் கிட்டகனூர் பகுதியில் நிகழ்ந்தது.

வீட்டு வாசலில் குட்டி நாகப்பாம்பு ஒன்று அசைவற்று படுத்திருந்தது. அப்போது பைக்கில் வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர், பாம்பு இருப்பதை கவனிக்காமல் அதன் மீது பைக் ஏற்றியுள்ளார்.
வலியால் துடித்த பாம்பு முதலில் தீண்ட முயன்று தோல்வியடைந்தது. ஆனால், பைக்கை பின்னோக்கி திருப்பியபோது இளைஞரின் கால் பாம்புக்கு அருகில் சென்றபோது, இரண்டாவது முயற்சியில் பாம்பு அவரைக் கடித்தது.

அதிர்ஷ்டவசமாக, கடி காலில் படாமல் காலணியில் பட்டதால் இளைஞர் உயிர் தப்பினார். பயத்தில் பைக்கை கீழே போட்டுவிட்டு அவர் ஓடிய காட்சிகள், சிசிடிவியில் பதிவாகி, சினிமாவை மிஞ்சும் வகையில் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
இரண்டாவது சம்பவம் பெங்களூருவின் பன்னர்கட்டா பகுதியில் நடந்துள்ளது. 41 வயதான ஐடி ஊழியர் மஞ்சு பிரகாஷ், குடும்பத்துடன் வசித்து வந்தவர், கடைவீதிக்கு செல்வதற்காக ஷூ அணிந்து சென்றார்.

வீடு திரும்பிய சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி உயிரிழந்தார். ஷூவிற்கு வெளியே கட்டுவிரியன் பாம்புக்குட்டி ஒன்று உயிரிழந்து கிடந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மஞ்சு பிரகாஷ் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கியதால் காலில் எப்போதும் லேசான வலி இருந்ததாகவும், இதனால் பாம்பு கடித்தது தெரியாமல் போயிருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறினர். ஆனால், பிணக்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

ஷூ உள்ளிட்டவை சூடாக இருப்பதால், பாம்புகள் அவற்றுக்குள் பதுங்கி கொள்ள வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். காலணிகளை அணிவதற்கு முன் நன்றாக தட்டி பரிசோதித்து பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவங்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளன.

Summary : In Karnataka, two snakebite incidents occurred. In Kittaganur, a youth escaped unharmed when a baby viper bit his shoe instead of his foot after his bike ran over it. In Bengaluru’s Bannerghatta, a 41-year-old IT employee, Manju Prakash, died after a snakebite inside his shoe went unnoticed.


